பக்கம் எண் :

தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் 23

கருதுவர். இந்தப் ‘பிற நாட்டில்’ ‘பஃறுளியாறு’ என்ற ஓர் ஆறும்,
குமரிக்கோடு என்ற ‘பன்மலையடுக்கத்து’ மலைத்தொடர் ஒன்றும்
இருந்தனவென்றும், அக் காலத்திற்றான் தொல்காப்பியர் வாழ்ந்திருந்தார்
என்றும், அவர் காலத்துக்குப் பின்பு இக் காலத்திய குமரிமுனை வரையில்
தென்னிலப் பகுதி கடலில் மூழ்கிப் போயிற்று என்றும், இக் காரணத்தினால்
காலத்தால் தொல்காப்பியருக்குப் பிற்பட்டவரான இளங்கோவடிகள் தாம்
பாடிய சிலப்பதிகாரத்தில், ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பவ்வமும்,
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு’ என்று கடலைத் தமிழகத்துக்குத்
தென் எல்லையாக வகுத்தார் என்றும் கொள்ள வேண்டும். பஃறுளியாறு
என்பது குமரியாற்றுக்குத் தென்புறத்தில் பன்மலை யடுக்கத்தில் ஓடிற்று.
முதன்முதல் கடல்கோளுக்கு உட்பட்டது பஃறுளியாறுதான். பிறகுதான்
குமரிமலைத் தொடர் கடலில் மூழ்கி மறைந்து போயிற்று. இளம்பூரணர்,
இறையனார் அகப் பொருளின் உரையாசிரியர், அடியார்க்கு நல்லார்
ஆகியோர் அனைவரும் குமரிமுனைக்குத் தெற்கிலும் தமிழகம்
நெடுந்தொலைவு பரவி இருந்தது என்று கருதினர். இவர்கள் கூற்றைப்
புனைந்துரை என்றோ, பிற நாடுகளையும் பிற மொழிகளையும் தாழ்த்தித்
தமிழ்நாட்டையும் தமிழ்மொழியையும் உயர்த்திப் புகழ் தேடினர் என்றோ
கொள்வதற்கில்லை. சான்றோர் மொழிகளைக் கொண்டும், தத்தம் காலத்தில்
மக்கள் சமுதாயத்தில் நிலவி வந்த பழங்காலச் செய்திகளைக் கொண்டும் தம்
ஊகத்தைக் கொண்டும் இவர்கள் இம் முடிவுக்கு வந்துள்ளனர் என்பதில்
ஐயமில்லை. நமக்குக் கண்கூடான காரணங்கள் ஏதும் தோன்ற
வில்லையாயினும் பல காலமாக நிலவி வரும் பழங்கொள்கைகளைப்
புறக்கணித்தல் அறிவுடைமையன்று.

     வரலாற்றுக் காலத்திலேயே தென்னிந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும்
பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால் தமிழகத்துத் துறைமுகப்
பட்டினங்கள் பல நீரில் மூழ்கிவிட்டன. குமரிமுனைக்குத் தென்பாலும்
நிலப்பகுதி இருந்ததாகவும் அதைக் கடல் கொண்டு போயிற்றென்றும்
புவியியலார் கருதுகின்றனர். ஆனால் அந்நிலப்பகுதி எவ்வளவு தூரம்
பரவியிருந்தது என்று அறுதியிட்டு அறிய முடியவில்லை. வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்திலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். கடல்
கொண்டு போன அத் தென்னிலப் பகுதிக்குக் ‘குமரிக்கண்டம்’ என்றொரு
பெயருண்டு. குமரிக்கண்டத்தைப்பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும்
உரைகளிலும் ஆங்காங்கு அகச் சான்றுகளாக விரவிக் காணப்படுகின்றன.
பாண்டியன் ஒருவன்