பக்கம் எண் :

தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை 221

சமயம்

     சங்கம் கலைந்து களப்பிரர் ஆட்சியின்போதும், பிறகும் மூன்று
சமயங்கள் தமிழகத்தில் வளர்ந்து வந்தன. வைதிக சமயம், சமணம், பௌத்தம்
என்பன அவை. இம் மூன்றும் ஒன்றோடொன்று கடும் போட்டியில் இறங்கின.
போட்டியில் கிடைக்கும் வெற்றியே அவற்றின் நிலைப்புக்கும், வளர்ச்சிக்கும்
அடிப்படை என்னும் அளவுக்கு அச் சமயங்களின் போக்கானது அமைக்கப்
படலாயிற்று. இம் மூன்று சமயங்களுக்குமிடையே ஏற்பட்ட போட்டியில்
தொடக்கத்தில் சமணத்துக்கும், பௌத்தத்துக்கும் செல்வாக்கானது ஏற்றம்
பெற்றுவந்தது. ஆனால், நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றிச்
சைவத்துக்கும், வைணவத்துக்கும் ஆற்றிய பெருந்தொண்டின் காரணமாக அச்
சமயங்கட்கு ஏற்பட்டிருந்த செல்வாக்குப் படிப்படியாகக் குறைந்து வரலாயிற்று.
இறுதியாகப் பௌத்த சமயம் தேய்ந்து மறைந்தே போயிற்று. புத்தரும்
திருமாலின் அவதாரங்கள் பத்தினுள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டார். சமணமும்
நாட்டின் மூலைமுடுக்குகளில் ஒதுங்கி ஒடுங்கி இயங்க வேண்டிய நிலையை
அடைந்தது. வேந்தன் எச் சமயத்தில் ஈடுபாடு கொண்டானோ அச்
சமயத்துக்கே உயர்வு உண்டாயிற்று. ஆகவே, மன்னனின் கருத்தையும்,
ஈடுபாட்டையும், சார்பையும் தம்பால் கவர்ந்து கொள்ளுவதற்குச் சமயங்கள்
ஒன்றையொன்று முந்திக்கொள்ள முனைந்தன. போட்டியில் எச் சமயம்
வெற்றிகண்டதோ அச் சமயத்தையே மன்னனும் மக்களும் பின்பற்றுவது
வழக்கமாயிற்று.

     சைவமும் வைணவமும் இந்து சமயத்தின் இரு கண்கள் எனலாம். சைவ
நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் வைதிக சமயத்துக்குப் புத்துயிர்
அளிப்பதற்காகவே பிறவி யெடுத்தவர்கள்; தாம் மேற்கொண்ட பணியைத்
திறம்படப் புரிந்து தாம் எடுத்த பிறவியின் நோக்கம் நிறைவுற்றதைக்
கண்ணால் கண்டவர்கள். வைதிக சமயம் மீண்டும் ஒருமுறை தன் ஒளி குன்றி
ஆக்கத்தில் சரியாதபடி திடமான அடிப்படையின்மேல் அதை நிறுவினார்கள்.
தமிழகத்தில் சமண சமய நூல்கள் பெருகின. ஒழுக்கத்தை வற்புறுத்தும்
நூல்களும், இலக்கியமும் இலக்கணமும் தோன்றின. பதினெண்கீழ்க்கணக்கில்
தொகுக்கப்பட்டுள்ள சிறுபஞ்சமூலம், ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது,
ஐந்திணை எழுபது, நாலடியார், ஆசாரக் கோவை ஆகியவை சமணர்
படைத்த இலக்கியங்கள். நீலகேசி என்னும் காப்பியமும் சமண நூலாகும்.
சமணர்கள்