தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், வாழ்க்கையில் விழுப்பம் கொடுக்கும் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்புவதற்கும் உழைத்தனரேனும் அவர்களுடைய உழைப்பானது அவர்கட்கு உற்ற இடத்தில் கைகொடுத்து உதவவில்லை. சைவசமய குரவர்களும், ஆழ்வார்களும் பெருக்கிவிட்ட பக்தி வெள்ளத்தில் சமணர்கள் செயலற்று மூழ்கிப்போயினர். எனினும், சமண சமயம் தனக்குற்ற இன்னல்களையும் இடையூறுகளையும் கடந்தேறி மன்னர் ஆதரவையும் மக்களின் பாராட்டையும் ஈடுபாட்டையும் ஓரளவு தொடர்ந்து பெற்று வரலாயிற்று. நாயன்மார்களும் ஆழ்வார்களும் அளவையால் கட்டுண்டு கிடக்கும் தத்துவங்களையோ, உயிர்ப்பை ஒடுக்கும் யோக நெறியையோ, கடவுள் முன்னிலையில் தன்னையே அழித்துக் கொள்ளத் தூண்டும் உணர்ச்சி வெறியையோ பாராட்டிலர். கடவுளிடத்து அயராத அன்பு ஒன்றையே அவர்கள் மக்களுக்குப் போதித்து வந்தனர். ‘காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது. . . . நாதனாமம் நமச்சிவாயவே’ என்று திருஞானசம்பந்தர் பாடினார். கடவுள் அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்பதும், அவனிடத்தில் இடையறாத ஈடுபாடு உடையவர்களுக்கு அவனுடைய திருவருள் தானாக வந்து சொரியும் என்பதும், செல்வச் செருக்கும் வாதாடுந் திறனும் அத் திருவருளுக்குத் தடையாக நிற்பன என்பதும் சைவத்துக்கும் வைணவத்துக்கும் பொதுவான கொள்கைகள். நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் ஆகியவர்களுள் ஒருவரேனும் துறவு பூண்டு காட்டிலும் மலையிலும் ஒடுங்கி வாழ்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மக்களிடையே வாழ்ந்து வந்தார்கள்; தம்முள் எழுந்த இறையன்பை எளிய, இனிய சொற்களால் இசையுடன் விளக்கியவர்கள். கடவுளுக்கு அஞ்ச வேண்டியதில்லை. அவரிடத்தில் ஈடுபாடுகொண்டு, அகங்குழைந்து, நெஞ்சமாகிய திரையில் அவரைப்பற்றிய எண்ணங்களை அழியாமல் தீட்டிவைத்து ‘நான்’ என்னும் செருக்கை அறுப்பார்களாயின் கடவுளின் திருவருள் தானாக வந்தெய்தும் என்பது இச் சமயச் சான்றோரின் மெய்யுரைகளாகும். மறைபட்டுக் கிடந்த ஒரு பேரின்ப வாயில் இவர்களால் மக்கள் முன்பு திடீரென்று திறந்து நின்றது. அவ் வாயிலுக்குள் நுழைவதற்கு நூலுணர்வு வேண்டா; சொல்வன்மை வேண்டா; செல்வம் வேண்டா; காட்டுக்கும் மலைக்கும் ஓட வேண்டா. இறைவன் மாட்டு இடையறாத வேட்கையும், எப் பொருளையும் அவன் வடிவமாகக் காணும் காட்சிப் பேறும் போதுமானவை. இந்தக் கொள்கையை |