இச் சான்றோர் வளர்த்து வந்தனர். தாம் பெற்ற பேரின்பத்தை மறையாது, வரையாது அவர்கள் மக்களுக்கும் வாரி வழங்கினர். உலக இயல்புகளையும், இயற்கை எழிலையும் அவர்கள் மறுக்கவும் இல்லை; மறக்கவும் இல்லை. வெளி, வளி, தீ, நீர், நிலம் என்னும் ஐந்து பூதங்களிலும், பேசுகின்ற சொல்லிலும், எண்ணுகின்ற எண்ணங்களிலும் கடவுள் கலந்துள்ளார் என்பதை வலியுறுத்தி, எண்ணம், செயல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும் என்று மக்களுக்கு எடுத்தோதினர். திருநாவுக்கரசு நாயனார், திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார் ஆகிய இம்மூவரும் பல்லவர் காலத்து வாழ்ந்தவர்கள். திருஞானசம்பந்தரால் அன்புடன் ‘அப்பரே’ என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் வேளாள குலத்தைச் சார்ந்தவர். தென்னார்க்காட்டு மாவட்டத்தில் திருவாமூர் என்னும் சிற்றூரில் தோன்றியவர். இவர் எண்பத்தொரு வயதுவரையில் உலக வாழ்க்கையில் இருந்தார். சைவக்குடியில் பிறந்த இவர் சமணராக மாறி நெடுங்காலம் துறவு பூண்டிருந்தார். பிறகு தம் தமக்கையாரின் அன்பு ஈர்ப்புக்கு உடன்பட்டு மீண்டும் சைவரானார். வாழ்க்கையில் ஏற்படும் பல திருப்பங்களைக் காணவும், பல இன்னல்களைக் கடந்தேறி வாழ்க்கைப் பயனை எய்தவும் இவருடைய முதுமை இவருக்குப் பெரிதும் துணை புரிந்தது. முதலில் சமணனாக இருந்த மகேந்திரவர்ம பல்லவனும் சமண சமயத்தைக் கைவிட்ட அப்பருக்குப் பல இன்னல்கள் இழைத்தான் என்று பெரியபுராண வரலாறு கூறுகின்றது. திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் மொத்தம் முந்நூற்றுப் பத்தாகும். அவர் தனித்தும் திருஞான சம்பந்தருடன் பல சிவன் கோயில்களுக்குச் சென்றும் பாடல்கள் பாடினார். ஏழை எளியவர், பிணியோர் அனைவரும் அவருடைய அன்புக்கு ஆட்பட்டிருந்தனர். அப்பூதியடிகள் என்ற அந்தணர் ஒருவர் திருநாவுக்கரசரைத் தம் வழிபாட்டுத் தெய்வமாகவே கொண்டிருந்தார். திருநாவுக்கரசரின் தமிழ், படிப்போர் உள்ளத்தைத் தொடக்கூடியது. எவ்வுயிரினும் சிவத்தையும் சக்தியையும் இணைத்துக் காணவேண்டும் என்ற தத்துவம் இவரிடம் விளக்கம் பெற்றுள்ளது. கடவுளை ‘இப்படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாது’ என்ற உயர்ந்த தத்துவத்தை இவர் வாக்கில் முதன்முதல் காண்கின்றோம். திருநாவுக்கரசர் தேவாரத்தில் அகத்துறைப் பாடல்கள் |