பக்கம் எண் :

224தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

பல உள்ளன. தாண்டகம் என்னும் செய்யுள் இலக்கணத்தைக் கையாண்டு
இவர் பாடல்கள் பாடியுள்ளார். ஆதலால் இவருக்குத் தாண்டக வேந்தர்
எனவும் பெயருண்டு. அவை இசையிலும், சொல்வன்மையிலும், பொருட்
செறிவிலும் சிறந்தோங்கி விளங்குகின்றன. தொண்டு செய்தே மெய்யுணர்வுப்
பாதையில் நடக்கவேண்டும் என்பது இவரது துணிபு. ‘என் கடன் பணி செய்து
கிடப்பதே’ என்று இவர் பாடினார். கோயில்களில் புல் பூண்டுகளைச்
செதுக்கியும், அலகினால் பெருக்கியும், சாணத்தால் மெழுகியும்
தூய்மைப்படுத்தும் திருப்பணியை இவர் செய்து வந்தார். அதற்காக இவர்
எப்போதும் தம் கையில் புல் செதுக்கம் உழவாரப்படை யொன்றைத் தாங்கிக்
கொண்டேயிருந்தார். ‘நான்’ என்னும் முனைப்பை அறவே ஒழித்த
மெய்ஞ்ஞானி இவர். தம் வாணாளின் இறுதியில் ‘புண்ணியா உன்னடிக்கே
போதுகின்றேன்’ எனக் கூறிச் ‘சிவானந்த வடிவமாகித் திருப்புகலூரில்
சிவபெருமான் திருவடிக் கீழ் அமர்ந்திருந்தார்’ என்று பெரிய புராணம் கூறும்.

     மகேந்திரவர்மன் தான் சைவனான பிறகு இப்போது திருப்பாதிரிப்
புலியூர் என வழங்கும் பாடலிபுத்திரத்திலிருந்த சமணப் பள்ளிகளை இடித்துத்
திருவதிகையில் தன் பெயரிலேயே ‘குணபதீச்சுரம்’ என்ற கோயிலை
எழுப்பினான் என்று பெரிய புராணம் கூறும். ‘குணபரன்’ என்பது
மகேந்திரவர்மனைக் குறிக்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இச்
செய்தியைத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு ஒன்று உறுதிப்படுத்துகின்றது.
‘இலிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயர் கொண்ட அரசன் இந்த
இலிங்கத்தினால் புறச்சமயத்திலிருந்து திரும்பிய அவனது ஞானம்
நெடுங்காலம் நிலைப்பதாகுக’ என்பதுதான் அச் செய்தி. குணபரன் என்றும்
அழைக்கப்பட்ட மகேந்திரவர்மன் சமணத்தைக் கைவிட்டுச் சைவ சமயத்தைத்
தழுவித் திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலைக் கட்டினான் என்று இக்
கல்வெட்டுச் செய்தியினால் புலனாகின்றது.

     திருநாவுக்கரசர் மொத்தம் 49,000 பாடல்கள் பாடினார் என்றும்,
அவற்றுள் மறைந்தவை போக இப்போது எஞ்சி நிற்பவை 310 பதிகங்களே
என்றும் திருமுறை கண்ட புராணம் பகர்கின்றது.

     திருநாவுக்கரசருடன் இணைந்திருந்து சைவநெறியைத் தழைத்தோங்கச்
செய்தவர் திருஞானசம்பந்தர். இவர் சீர்காழியில் பிறந்தவர்.
மூன்றாமாண்டிலேயே இவர் மெய்ஞ்ஞானம்