கைவரப் பெற்றார் என்பர். சிவன் கோயில்கள் பலவற்றுக்கும் சென்று தேவாரப் பாடல்கள் பாடினார். இவர் மொத்தம் 16,000 பதிகங்கள் பாடினார் என்றும், இப்போது 384 பதிகங்களே கிடைத்துள்ளன என்றும் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது. திருநீலகண்டப் பெரும்பாணரும் அவர் மனைவி மதங்க சூளாமணியும் சம்பந்தர் பாடல்களுக்கு இசை வகுத்தார்கள். சம்பந்தரின் பாடல்கள் பெரும்பாலனவற்றுள் ஒவ்வொன்றிலும் முதற்பாதியில் இயற்கை எழில் வண்ணங்களைக் காணலாம். செறிந்த காடும், உயர்ந்து மஞ்சு சூழ்ந்த மலைகளும், சந்தனமும், அகிலும், சாதித் தேக்கமரமும், கரும்பும், தேன்கட்டியும், மலைச் சரிவுகளில் துள்ளி ஓடும் ஆமான்களும், பலவின் கனிகளைப் பிளந்துண்ணும் குரங்குகளும், சிறையாரும் மடக்கிளிகளும், புன்னைப் பறவைகளும், அன்னங்களும், நாரைகளும் காட்சியளிப்பதைக் காணலாம். திருஞானசம்பந்தர் சித்திர கவிகளும், யமக கவிகளும், யாழ்முரியும் பாடவல்லவர். தம் பாடல்கள் எல்லாவற்றிலும் சமணரையும் பௌத்தரையும் மிகவும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். சமணம் தமிழ்நாட்டில் செல்வாக்குக் குன்றி, ஒளிமங்கி வந்ததற்குக் காரணம் திருஞானசம்பந்தரின் முயற்சியேயாகும். கடவுளை ஒழித்த சமயங்களை ஒழிக்கும் நோக்கத்துடனேயே இவர் பிறவியெடுத்தார் போலும். பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குசன் சமணத்தைத் தழுவி வாழ்ந்தவன். அவனைச் சைவத்துக்கு மீட்டுக்கொள்ளவேண்டும் என்று விரும்பிய அவன் மனைவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரை நாடினர். அவர் சமணருடன் வாதிட்டு அவர்களை வென்றார். மன்னனும் சைவனானான். திருத்தொண்டத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ள நின்றசீர் நெடுமாறநாயனார் என்பவர் இம் மன்னன்றான். திருஞானசம்பந்தருக்குப் பதினாறாம் ஆண்டில் திருமணம் ஏற்பாடாயிற்று. நல்லூர்ப் பெருமணம் என்ற ஊரில் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது தெய்விகப் பேரொளி ஒன்று தோன்றிற்று என்றும், அதில் திருஞானசம்பந்தரும் மணமகளும் பந்தலில் கூடியிருந்த சுற்றத்தார் அனைவரும் கலந்து மறைந்து விட்டனர் என்றும் புராண வரலாறு கூறுகின்றது. அவ்வாறு அவர் மறைவதற்கு முன்பு அவர் இறுதியாகப் பாடிய பதிகம் ஒன்றில் ஐந்தெழுத்தின் சிறப்பை வியந்து ஓதினார். ‘வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே’ என்றும், |