சங்கிலி என்னும் இரு மனைவியரை மணந்து கொண்டபோதும் சிவபெருமானின் துணையை வேண்டிப் பெற்றார் என்று பெரிய புராணம் கூறும். சேக்கிழார் பாடிய பெரிய புராணம் முதலிலிருந்து இறுதி வரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றைக் கூறுவது போலவே அமைந்துள்ளது. எனவே, பெரிய புராணத்துக்குப் பாட்டுடைத் தலைவர் சுந்தரர்தாம். சுந்தரர் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருநாவலூர் என்னும் சிற்றூர் ஒன்றில் பிறந்தவர்; ஆதி சைவ குலத்தினர். இவர் தந்தையின் பெயர் சடையனார்; தாயாரின் பெயர் ஞானியார். சுந்தரருக்கு ஆரூரன் என்றும் ஒரு பெயர் உண்டு. திருமுனைப்பாடியின் மன்னர் நரசிங்க முனையரையர் என்பவர் திருநாவலூரைத் தம் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். இக் குறுநில மன்னர்தாம் சுந்தரரை இளமையில் எடுத்து வளர்த்தவர். சுந்தரருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடுகள் ஆயின. திருமண நாளன்று வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் தோன்றிச் சுந்தரருக்கும் தமக்கும் பெருவழக்கு ஒன்று உண்டு என்றும், அவ்வழக்குத் தீர்ந்த பிறகுதான் மணவினைகள் நடைபெறவேண்டும் என்றும் வாதாடினார். சுந்தரரின் பாட்டன் தம்மையும் தம் வழிவழி வருபவரையும் இம் முதியோருக்கு அடிமைப்படுத்திக் கொண்டதாக ஆளோலை ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார் என்றும், அதனுடைய மூலப்படி திருவெண்ணெய் நல்லூரில் இருப்பதாகவும் கூறிச் சுந்தரரையும் ஏனைய அந்தணரையும் அழைத்துக்கொண்டு அவ்வூரிலுள்ள ‘அருட்டுறை’ என்னும் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டார். வந்த முதியவர் தம்மை ஆட்கொள்ளவந்த சிவபெருமானே எனத் தெளிவுற்றவராய்ச் சுந்தரர் இறைவன் மீது அன்பு கனிந்து ‘பித்தா, பிறைசூடி’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டவராகையால் சுந்தரருக்கு வன்றொண்டர் எனவும் ஒரு பெயர் ஏற்பட்டது. சுந்தரர் பிறகு தவநெறியை மேற்கொண்டு தமிழகம் முழுவதும் சிவன் கோயில்களுக்குச் சென்று தேவாரத் திருப்பாட்டுகள் பாடிவந்தார். இவர் பாடிய பதிகங்களின் தொகை மொத்தம் 33,000 எனத் திருமுறை கண்ட புராணம் கூறும். ஆனால், இப்போது கிடைத்துள்ளவை 200 பதிகங்களேயாம். சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரின் பெயர்களைத் தொகுத்துத் ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் திருப்பாட்டு ஒன்றைச் சுந்தரர் |