பக்கம் எண் :

தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை 227

எவ்வித ஊறும் நேரிடாதவாறு சமணர்கள் மயிற்பீலியால் தரையைத்
தடவிக்கொண்டே நடப்பர். இரவில் விளக்கேற்றி வைத்தால் விளக்கில்
விட்டில்கள் விழுந்து இறந்துபோம் என்று அஞ்சி மாலையில் விளக்கு ஏற்றும்
முன்பே அவர்கள் உணவு உண்ணுவது வழக்கம். சமணர், இன்றும் இவ்
வழக்கத்தை நெகிழவிடாமல் கடைப்பிடித்து வருவதைக் காணலாம்.
கொல்லாமையாகிய நோன்பைச் சமணர் வழுவாமல் நோற்றுவந்ததுடன்
மக்களுக்கும் விரித்துரைத்தனர். தமிழ் மக்கள் அவர்களை விரும்பி ஏற்று
அவர்களுடைய நல்லுரைகட்குச் செவிசாய்த்து வந்தனர். ஆனால், சமணர்கள்
தம் சமயத்துக்கு ஏற்றமளித்ததுமன்றி வைதிக சமயத்தினரை வாதுக்கிழுத்தனர்.
உயிரைவிட நேர்ந்தாலும் தம் கொள்கைகளை வாதில் விட்டுக்கொடுக்காத
வன்னெஞ்சர்களாக அவர்கள் மாறி வந்தனர். சமணத்துக்கு முன்பே
தமிழகத்தில் நுழைந்து இடம் பெற்றுவிட்டிருந்த வேத நெறியைப் பழித்தும்,
தூற்றியும், மக்களுடைய நம்பிக்கைகளைச் சிதைத்தும், மந்திர தந்திரங்களைக்
கையாண்டும் தம் சமயத்துக்கு ஆக்கம் தேடிவந்தனர். சமணரைப் போலவே
பௌத்தரும் வைதிக சமயத்தை இகழ்ந்து பேசிவந்தனர் என்பது
திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களால் தெரிகின்றது. கொல்லாமை
நோன்பில் இவர்களுக்கும் ஈடுபாடு உண்டு. ஆனால், தானே ஒரு விலங்கைக்
கொல்லாமல், அதனுடைய ஊனைப் பிறர் கொடுத்தால் அதை வாங்கி
உண்ணலாம் என்ற கொள்கையுடையவர்களாக இருந்தனர். சமணர், பௌத்தர்
இருவருக்குமே கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கையில் உடன்பாடு
இல்லை. ஐயம் திரிபு இன்றிக் ‘கடவுள் உண்டு’ என்று உறுதியாகக் கொண்டு
ஒழுகி வருதலே பண்டைய தமிழரின் பண்பாடாகும். சமணமும் பௌத்தமும்
குன்றுவதற்கும், வேதநெறி தழைத்தோங்கி, மிகு சைவத்துறை விளங்குவதற்கும்
இவ்வொரு காரணமே போதுமானதாய் இருந்தது.

     தேவாரப் பாடல்கள் பாடிச் சைவசமயத்தை வளர்த்த சமய குரவர்
மூவருள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநாவுக்கரசருக்கும் சம்பந்தருக்கும்
காலத்தால் பிந்தியவர். திருஞானசம்பந்தர் சிவபெருமானிடம் மகன்
அன்பையும், திருநாவுக்கரசர் ஒரு தொண்டனின் அன்பையும், சுந்தரர்
தோழனின் அன்பையும் கொண்டிருந்தவர்கள் எனக் கூறுவதுண்டு. தாம்
வழிபட்ட இறைவனிடம் நட்புமுறையில் நடந்துகொண்டவர் ஆகையால் தம்
திருப்பதிகங்களில் தாம் விரும்பியதைக் கேட்டுப் பாடும் உரிமையைச் சுந்தரர்
பெற்றிருந்தார். தாம் பரவை,