முதலாம் மகேந்திரன் ‘மத்த விலாசம்’ என்றொரு நாடகத்தையும் வடமொழியில் எழுதினான். நிருத்தம், தாளம், இலயம் ஆகியவற்றிலும் அவன் வல்லுநனாக இருந்தான். அவனுடைய இசை வல்லமைக்குத் திருமெய்யக் கல்வெட்டு ஒன்றும் சான்று பகர்கின்றது. இசையில் புதுமைகள் பல புகுந்தன. அதைப் போலவே தமிழ்க் கூத்துகளிலும் புதுமைகள் புகுந்தன. சிற்பம் பாறைகளைக் குடைந்து கற்றளிகள் அமைத்தது பல்லவ மன்னர்கள் கையாண்ட புதுமைகளுள் ஒன்றாகும். முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லபுரத்தில் முழுப் பாறைகளைச் செதுக்கிக் கற்கோயில்களை எழுப்பினான். உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்துச் சிற்பங்கள் அனைத்தும் ஒரே காலத்தில் எழுப்பப்பட்டனவல்ல. பல சிற்பங்களுக்கு வடிவு கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால், அவற்றில் புனைவும் மெருகும் காணப்படவில்லை. முதலாம் மகேந்திரனின் உருவமும், அவனுடைய இரு அரசியரின் உருவங்களும் மாமல்லபுரத்தில் புடைப்போவியங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. ஆகையால் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் செதுக்கும் பணி இவன் காலத்திலேயே தொடங்கினபோலும், ஒற்றைக் கற்களில் செதுக்கப்பட்டு இப்போது இரதங்கள் என்று அழைக்கப்படும் கோயில்கள் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் தோன்றியவையாம். இரண்டாம் மகேந்திரன் சில கோயில்களைக் குடைவித்தான். இந்த இரதங்கள் பஞ்சபாண்டவர் பேராலும், திரௌபதியின் பேராலும் வழங்குகின்றன. சோழர் பாண்டியர் காலத்துச் சிற்பிகள் படைத்த சிற்பங்கள் சிலவற்றுக்கு வடிவ அமைப்பு முறைகளைக் காட்டி உதவிய பெருமை மாமல்லபுரத்துச் சிற்பங்களைச் சாரும். இராசசிம்மனின் மிகச் சிறந்த சிற்பப் படைப்புக் காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலாகும். இக் கோயில் இம் மன்னனுக்கு மட்டுமன்றி அவனுடைய பல்லவப் பரம்பரைக்கும், தமிழகத்துக்கும் என்றென்றும் அழியாத புகழைத் தேடித் தந்துள்ளது. இக் கோயிலை அமைப்பதற்கு இவனுக்கு இவனுடைய பட்டத்தரசியும் மகனும் பலவகையில் துணைபுரிந்தனர். கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள சிற்பக் கோலங்கள் பலவற்றை இக்கோயிலில் காணலாம். இக் கோயிலின் கருவறையைச் சுற்றி ஐம்பத்தெட்டுச் சிறு கோயில்கள் அமைந்துள்ளன. |