கருவறைக்கு முன்பு எழுப்பப்பட்டுள்ள மண்டபத்தின் சுவர்களின் மேல் மிக அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவை இப்போது மங்கி மறைந்து வருகின்றன. மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலானது சுருண்டு பொங்கி வரும் அலைகள் தன்னைக் கழுவிக் கழுவிச் சென்றும் காலத்தை வென்று நிமிர்ந்து நிற்கின்றது. அதனிடம் காணப்படும் சிற்பங்களின் மென்மையும், நுண்மையும், எழிலும் கடலுக்கே தனி ஒரு சோபையைக் கொடுத்து வருகின்றன. காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலையும் அதனுள் நின்று நிமிர்ந்திருக்கும் ஓங்கி உலகளந்த உத்தமனான பெருமாளின் நெடுந்தோற்றத்தையும் காணும்போது இக்கோயிலை எழுப்பிய இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் உள்ளத்தின் உயர்ச்சியையும் விரிவையும் எண்ணி எண்ணி வியப்பில் ஆழ்கின்றோம். பனைமலையிலுள்ள கோயில் பல்லவருடைய மற்றொரு புகழ் பெற்ற படைப்பாகும். இக் கோயில் ஓவியச் சிறப்பு வாய்ந்ததாகும். அங்குத் தீட்டப்பட்டுள்ள சிவபெருமான், பவானியம்மன் திருவுருவ ஓவியங்கள் கண்கவரும் எழிலின. ஆனால், சிதைவுற்றுள்ள அவற்றை நோக்கி அவற்றின் அவலநிலைக்குக் கண் கலங்கவேண்டியுள்ளது. இந்தியாவிலேயே மிகச் சிறந்தவை எனப் பாராட்டப்பெறும் பனைமலை ஓவியங்கள் இன்று அழிந்து விட்டன. அவற்றின் மங்கிய தோற்றத்தில் அஜந்தாவின் சாயலையும் பல்லவ ஓவியர்களின் கைவண்ணத்தையும் கண்டு கண்டு களிப்புறுகின்றோம். அண்மையில் செங்கற்பட்டு மாவட்டத்தில் பெரிய வெண்மணி என்னும் கிராமத்தில் பல்லவர் காலத்திய சிற்பம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அச் சிற்பம் புடைப்புச் சிற்ப வகையைச் சேர்ந்தது. அச் சிற்பம் துர்க்கையின் பல தோற்றங்களுள் ஒன்றை எடுத்துக் காட்டுகின்றது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பெண்கள் பலர் கூடி ஓர் இளம் பெண்ணுக்குத் துர்க்கையின் வேடம் புனைந்து வேட்டுவவரிப் பாடல்களைப் பாடி வழிபட்டனரெனக் கூறுகின்றார். அப்போது துர்க்கையின் கோலத்தை விளக்கும்போது அவள் முறுக்குண்ட கொம்புகளையுடைய கலைமான் ஊர்தியின்மேல் அமர்ந்திருந்தாள் ; அவள் கையில் சூலமேந்தியிருந்தாள் ; அவளுடைய சீறடிகளில் சிலம்பும் கழலும் புலம்பின; அவள் இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் (மகிடாசுரன்) தலைமிசை நின்ற தையலாவாள் என்று குறிப்பிடுகின்றார். இளங்கோவடிகள் அளித்துள்ள இலக்கணங்கள் |