பக்கம் எண் :

தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை 243

அத்தனையும் இப் பெரிய வெண்மணிச் சிற்பத்தில் காணலாம்.
இலக்கியத்துக்குச் சான்றாக அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.

அரசியல்

     சங்க காலத்து மன்னர்களைப் போலவே பல்லவ வேந்தர்களும்
கடவுளாகவே பாராட்டப்பட்டு வந்தனர். நாடாளும் பொறுப்பு முழுவதும்
மன்னன் கைகளிற்றான் ஒடுங்கிநின்றது. அரசுகட்டில் ஏறும் உரிமையானது
பரம்பரை உரிமையாய் இருந்து வந்தது. இம்முறை சிலசமயம் தவறியதுமுண்டு.
இரண்டாம் பரமேசுவர பல்லவன் இறந்த பிறகு மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னன் ஒருவனிடம் அரசுரிமை ஒப்படைக்கப்பட்டது.

     பல்லவ மன்னர்கள் உயர்ந்து நிமிர்ந்த அழகிய தோற்ற
முடையவர்களாக இருந்திருக்கவேண்டும் என்று கருதுவதற்குச் சான்றுகள்
உள்ளன. மாமல்லபுரத்து வராகக் குகையில் செதுக்கப்பட்டுள்ள சிம்மவிஷ்ணு,
மகேந்திரவர்மன் ஆகிய அரசர்களின் தோற்றம் எடுப்பாகவும் அரசக்
களையுடையதாகவும், மிடுக்காகவும் காணப்படுகிறது. பல்லவ மன்னர்கள்
கல்வி, அறிவு, கலைப் பயிற்சி, பண்பாடு ஆகிய நலன்களில் குறைவிலா
நிறைவாக விளங்கினர். சமயத்திலும், இறைவழிபாட்டிலும் அவர்கட்கு
அளவற்ற ஈடுபாடு உண்டு. பல்லவ மன்னர்களுக்கு ‘விடேல் விடுகு’ என்று
ஒரு விருதும் உண்டு. பல்லவர்கள் நந்தி யுருவம் தீட்டிய கொடியைத்
தாங்கினர்.

     பல்லவ மன்னர்களுக்கு அமைச்சர்கள் அரசியலில் துணை புரிந்து
வந்தனர்.10 மந்திரிகளும் பட்டப்பெயர்களுடன் விளங்கியதைக் காண்கிறோம்.
ஓர் அமைச்சருக்கு ‘விடேல் விடுகு காடுவெட்டித் தமிழ்ப் பேரரையன்’ என்ற
பெயர் வழங்கிற்று. மன்னருக்கு மந்தணம் கூறுவதும், அரசரின் அயல்நாட்டுத்
தொடர்புக்குத் தக்க நெடுமொழிகள் உதவுதலும் அமைச்சரின் சீரிய பணிகளாக
இருந்தன. அரசாங்கப் பணிகளை நன்கு நிறைவேற்றி வைப்பதற்குப் பல
ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுள் ‘வாயில் கேட்பார்’
என்போர் தலைமைச் செயலாளருக்கு உதவிபுரிந்து வந்தனர். அரசாங்க மூல
பண்டாரம் ‘மாணிக்கப் பண்டாரம் காப்பன்’, கொடுக்கப்பிள்ளை
என்பவர்களின் பொறுப்பில் செயற்பட்டு வந்தது.

     10. பெரிய. புரா. திருநாவு. புரா. 90-92