பக்கம் எண் :

244தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     பல்லவரின் அரசியலில் மன்னனே நீதியின் தலைவனாகச்
செயற்பட்டான். கோட்டங்களிலும் சிற்றூர்களிலும் நீதி மன்றங்கள் இயங்கி
வந்தன. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நீதி மன்றத்துக்கு ‘அதிகரணம்’ என்று
பெயர். கோட்ட நீதிமன்றங்கள் விதித்த தண்டனைக்கு ‘அதிகரண தண்டம்’11
என்றும், சிற்றூர்களில் நடைபெற்று வந்த நீதிமன்றங்கள் விதித்த
தண்டனைக்குக் ‘கரண தண்டம்’ என்றும் பெயர்.

     உழவு நிலங்களும், தரிசுகளும் அளந்து கணக்கிடப்பட்டன.
நிவந்தங்களாக அளிக்கப்பட்ட நிலங்களுக்கு எல்லைகள் வரையறுக்கப்
பட்டதாகக் கல்வெட்டுகளினின்றும் செப்பேடுகளிலிருந்தும் குறிப்புகள்
கிடைக்கின்றன. கழனிகளுக்கு வரம்பிட்டு வேலியும் நட்டு வைத்தனர்.

     அரண்மனைப் பொற்கொல்லனின் தொழில் பரம்பரை உரிமையாகப்
பாதுகாக்கப்பட்டு வந்தது. சாசனங்களைச் செப்பேடுகளில் பொறிக்கும்
பொறுப்பை மேற்கொண்டிருந்த அலுவலன் ‘தபதி’ எனப்பட்டான். இவனும்
பரம்பரைப் பணியாளன் ஆவான். தானங்களையும் நிவந்தங்களையும் ஆவண
உருவத்தில் எழுதி அமைத்தவன் ‘காரணத்தான்’ அல்லது ‘காரணிகன்’
என்பவன். காரணிகளைப் பற்றிய குறிப்புகள் சோழர்களின் கல்வெட்டுகளிலும்
வடஇந்தியக் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. காரணிகருள் பல
படிநிலைகள் உண்டு.காரணிகன், அவனுக்குமேல் உத்தரகாரணிகன்,
அவனுக்குமேல் பரமோத்தர காரணிகன் என்று காரணிகர் முத்தரத்தினர்
பணிசெய்து வந்தனர். இப்போது தமிழகத்தில் ஊர்தோறும் ஊர்க்கணக்கு
எழுதும் கிராமக்கணக்கன் அல்லது கர்ணம் என்பவர் பல்லவர் காலத்திய
காரணிகன் பணியையே தொடர்ந்து நடத்திவருகின்றனர். செங்கற்பட்டு,
வடஆர்க்காடு, தென்னார்க்காடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில்
காரணிகன் அல்லது கருணீகன் அல்லது கணக்கன் என்னும் குலமே ஒன்று
தனியாகக் காணப்படுகின்றது.

     பல்லவர்கள் ஆற்றல்மிக்க கடற்படைகள் வைத்திருந்தனர். நாட்டிலும்
துறைமுகங்கள் சில செழித்து விளங்கி வந்தன. அவற்றுள் மாமல்லபுரம்,
நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் செயற்பட்டிருந்த துறைமுகங்கள்
சிறப்பானவை. பல்லவருக்கும் சீனருக்கும் கடல் வாணிகத் தொடர்பு இருந்து
வந்தது. பல்லவ

     11. S.I.I. II. No. 353.