பக்கம் எண் :

246தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

வேரியின் நிருவாகம் ஓர் ஏரி வாரியத்தினிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.
பல்லவர்கள் காலத்தில் பெருங் கிணறுகள் எடுக்கப்பெற்றன. திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில், திருவெள்ளறை என்னும் ஊரில் தோண்டப்பட்டுள்ள
‘மார்ப்பிடுகு பெருங்கிணறு’ மிகவும் பெரிய தொன்றாகும். இதன் பரப்பு
முப்பத்தேழு சதுர அடி. இது சுவஸ்திக வடிவத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.
அதனால் இது ‘நால்மூலைக் கிணறு’ என்று வழங்கி வருகின்றது. நான்கு
பக்கத்திலிருந்தும் படிக்கட்டுகள் கிணற்றின் அடிப்புறத்துக்கு இறங்கிச்
செல்லுகின்றன. இப் படிக்கட்டுகளில் பல அழகிய சிற்பங்கள் அணி செய்து
நிற்கின்றன.

தான முறைகள்

     நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த
குடி (தனிப்பட்ட குடிகளின் உரிமை), கோ (மன்னனுக்கு இருந்த வரி விதிப்பு
உரிமை), பொறி (காணிக்கல் போன்ற உரிமை அடையாளங்கள்) ஆகியவை
மாற்றப்படும்.13 தனக்கு உரிமையான ஒன்றையே ஒருவன் தானமாக அளிக்க
முடியும். ஆகையால் தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தான நிலத்தின்
உரிமையாளரிடமிருந்து அதை விலைக்கு வாங்கித் தனக்குச் சொந்தமாக்கிக்
கொள்ளுவான் ; பிறகே பிறருக்குத் தானமாக அதை வழங்குவான்.
பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலம் ‘பிரமதேயம்’ எனப் பெயர்
பெற்றது. கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தானத்துக்குத் தேவபோகம் அல்லது
தேவதானம் எனப் பெயர் வழங்கிற்று. பௌத்த சமண சமயக்
கோயில்களுக்கும் மடங்களுக்கும் வழங்கப்பட்ட நிலம் ‘பள்ளிச் சந்தம்’
எனப் பெயர் பெற்றது. பிரமதேய பள்ளிச் சந்த தானங்களுடன் குறிப்பிட்ட
சில உரிமைகளும், பரிவாரங்களும் வழங்கப்பட்டன. கொடுக்கும்
தானங்களைக் காப்பாற்றிவரும்படி பின்தலைமுறையினரைக் கேட்டுக்
கொள்ளும் கட்டுரையும் சாசனங்களில் சேர்க்கப்படுவது வழக்கம்.

ஊராட்சி முறைகள்

     தமிழகத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வழங்கி வந்த
ஊராட்சி முறைகளைப் பற்றிய விரிவான செய்திகள் கிடைக்கவில்லை.
நந்திவர்ம பல்லவன் காலத்திலிருந்து கல்வெட்டுகளின் வாயிலாக அவை
கிடைத்து வருகின்றன.

     13. T. A. I. II. P. II. Cop. Pl. of Naragunan