பராந்தகன் (கி.பி. 907-955) ஆதித்தன் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவனாகத் திகழ்ந்து சோணாட்டு அரசு கட்டிலை அணிசெய்து வந்தவன். திருப்புறம்பயம் போர் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டு கால அளவில் சோழ அரசு வியக்கத்தக்க அளவு விரிவடைந்துவிட்டது. இப்போரில் தோல்வியுற்ற வரகுண பாண்டியன் போர் முடிவுற்ற வுடனே தன் உலக வாழ்வையும் நீத்தான். அவனையடுத்து அவன் மகனான ஸ்ரீபராந்தக வீரநாராயணன் பட்டத்துக்கு வந்தான். பாண்டிய நாட்டில் விளைந்த உள்நாட்டுக் கலகங்களின் காரணமாக அவனும் தன் ஆற்றலை இழந்துகொண்டிருந்தான். ஆதித்தனையடுத்து அவன் மகன் முதலாம் பராந்தகன் அரியணை ஏறினான். அப்போது சோழ நாட்டின் வடவெல்லை காளத்தி வரையிலும், தெற்கில் காவிரி வரையிலும் விரிவடைந்திருந்தது. மைசூர்ப் பீடபூமியும், கேரளக் கடற்கரையும் சோழ அரசுக்குப் புறம்பாக நின்றன. பராந்தகனின் ஆட்சி நாற்பத்தெட்டு ஆண்டுக் காலம் நீடித்தது. பராந்தகன் பாண்டியரைத் தனக்குப் பணிய வைத்துத் தன் ஆட்சியைத் தெற்கில் கன்னியாகுமரி வரையில் விரிவுறச் செய்தான். தன்னுடைய மூன்றாம் ஆட்சி யாண்டுக்குள் பராந்தகன் பாண்டி நாட்டின்மேல் படையெடுப்பு ஒன்றை மேற்கொண்டான். அவனை எதிர்த்து நிற்கும் வலியிழந்து இப் பாண்டியன் தன் நாட்டைக் கைவிட்டு முதலில் இலங்கைக்கு ஓடினான் ; பிறகு அங்கிருந்து கேரளத்துக்கு ஓடினான். சின்னமனூர், உதயேந்திரம் செப்பேடுகளிலிருந்து இப் பாண்டிய மன்னனின் பெயர் இராசசிம்மன் என்று அறிகின்றோம். இலங்கை வேந்தன் ஐந்தாம் காசிபன் (கி.பி. 913-923) தனக்குப் படைத்துணை அனுப்பியும், பாண்டியன் வெற்றி காணத் தவறினான். அவன் வெள்ளூர் என்ற இடத்தில் சோழனிடம் படுதோல்வியுற்றான் (கி.பி. 915). இம் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பராந்தக சோழனின் செல்வாக்கானது மேலும் ஓங்கி வளரலாயிற்று. அவன் பாண்டி நாட்டின் அரசனாகவும் மதுரையில் முடிசூட்டிக் கொள்ள அவாவினான். ஆனால், பாண்டிய நாட்டு மணிமுடியும் செங்கோலும் மதுரையில் இல்லை என்று அறிந்த பராந்தகன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். பாண்டியன் இராசசிம்மன் நாட்டைத் துறந்து இலங்கைக்கு ஓடியவன், அவற்றை அங்கேயே கைவிட்டுக் கேரளம் போயிருந்தான். அம் மணிமுடியையும், செங்கோலையும் தனக்கு உடனே அனுப்பி வைக்கும்படி பராந்தகன் அந் நாட்டு மன்னன் நான்காம் உதயன் |