பக்கம் எண் :

சோழப் பேரரசின் தோற்றம் 251

     கொங்கு நாட்டில் ஆதித்தனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
அவற்றைக் கொண்டு கொங்கு தேசத்தையும் அவன் வென்று தன்
ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டான் என்று ஊகித்தறியலாம். இவன்
தழைக்காடு என்ற ஊரைக் கைப்பற்றினான் என்று ‘கொங்கு தேச இராசாக்கள்’
என்னும் நூல் குறிப்பிடுகின்றது. ஆதித்தன் கொங்கு நாட்டிலிருந்து
கைப்பற்றிக் கொணர்ந்த பொன்னைக் கொண்டு தில்லையம்பலத்துக்குக் கூரை
வேய்ந்தான் என்று நம்பியாண்டார் நம்பியும் கூறுகின்றார்.3 கங்க மன்னனான
இரண்டாம் பிருதிவிபதி ஆதித்தனுக்குக் கீழ்ப்பட்ட மன்னனாகவே
ஆட்சிபுரிந்து வந்தானாகையால் மேலைக் கங்கரிடமிருந்தே ஆதித்தன் தன்
நாட்டைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.

     ஆதித்தன் சேர மன்னன் தாணுரவியுடன் நல்ல நட்புறவு
கொண்டிருந்தான். விக்கியண்ணன் என்ற படைத் தலைவன் ஒருவனுக்கு
இவ்விரு அரசரும் ‘தவிசு, சாமரை, சிவிகை, கோயில், போனகம், காளம்,
ஆண் யானை’ ஆகிய விருதுகளையும் ‘செம்பியன் தமிழவேள்’ என்ற
பட்டப்பெயரையும் வழங்கியுள்ளனர்.4 இவ் வீரன் தாணுரவியின் படைத்
தலைவனாக அமர்ந்திருந்து சோழனுடைய கொங்குநாட்டுப் போர்களில் அம்
மன்னனுக்குப் படைத்துணை வழங்கியுள்ளான்.

     காளத்தியை அடுத்துள்ள தொண்டைமான் நாடு என்ற இடத்தில்
ஆதித்தன் இம் மண்ணுலகை நீத்தான். அவனுக்குப் பராந்தகன் என்றும்,
கன்னரதேவன் என்றும் இரு மக்கள் இருந்தனர். கன்னரதேவன் இளங்கோன்
பிச்சி வயிற்று மகன். ஆதித்தனுக்குப் பிறகு முடிசூட்டிக் கொண்ட பராந்தகன்
தன் தந்தையின் சமாதியின்மேல் ‘கோதண்ட ராமேச்சுரம்’ என்ற பெயருடைய
கோயிலை எழுப்பினான்.5 ஆதித்தனுடைய காலத்திலிருந்தே சோழப்
பரம்பரையானது சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்ட பரம்பரையாகவே
தொடங்கிற்று. சோழர்கள் சூரிய குலத்து வந்தவர்கள் என்றும்,
விசயாலயனுக்கு முன்பு இக் குலத்தினர் பதினைவர் அரசாண்டனர் என்றும்
அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. அப் பதினைவருள் கரிகாலன், கிள்ளி
கோச்செங்கணான் ஆகியோர்களின் பெயர்களும் சேர்ந்துள்ளன.

     3. நம்பி. ஆண். நம்பி. திருத். திருவந். 65.
     4. S. I. I. III. No. 89.
     5. Ep. Ind. 286/1906; Ep. Ind. 230/1903.