பக்கம் எண் :

250தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

யடுத்து அவன் மகன் ஆதித்த சோழன் முடிசூட்டிக்கொண்டான்.
பாண்டியருக்கும் பல்லவருக்கும் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பெரும்
போர் ஒன்று நிகழ்ந்தது. இப் போரில் ஆதித்த சோழன் பல்லவருடன்
இணைந்தான். போரில் அபராசிதன் வெற்றி கண்டான். அவனுடைய
துணைவன் பிருதிவிகங்கன் போர்க்களத்தில் புண்பட்டு மாண்டான் ;
வரகுணன் தோல்வியுற்றான்.2 அபராசிதன், ஆதித்தன் தனக்குப் புரிந்த
பேருதவியைப் பாராட்டினான். விசயாலயன் முத்தரையரிடமிருந்து கைப்பற்றித்
தந்த நாட்டுடன் தானும் ஆதித்தனுக்குச் சில ஊர்களைப் பரிசாக
வழங்கினான்.

     முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) அரசியல் ஆற்றல் மிக்கவன் ;
போர்த்திறன் வாய்ந்தவன். சோழநாட்டுக்கு விரிவு தேடவேண்டும் என்ற சீரிய
நோக்கங் கொண்டவன். தன் தந்தை தனக்கு மீட்டுக் கொடுத்த சோழ
நாட்டாட்சியை வலுவான அடிப்படையின்மேல் நிலைநாட்ட முயன்றான்.
அன்பில் செப்பேடுகளில் இவனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
சயாத்திரி மலைகளிலிருந்து கீழைக் கடற்கரை வரையில் காவிரியின்
இருமருங்கிலும் சிவபெருமானுக்காகக் கற்றளிகள் பல எடுப்பித்தான். சோழ
நாட்டின் பெரும்பகுதி பல்லவரின் ஆட்சியின்கீழ் இருந்துவந்ததைக் கண்டு
ஆதித்தன் மனம் பொறாதவனாய் அதை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டான்.
பல்லவருடன் போர் தொடுத்தான். போரில் மாபெரும் வெற்றியுங் கண்டான்.
உயர்ந்ததொரு யானையின்மேல் அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த
அபராசித பல்லவனை ஆதித்தன் வாளால் ஒரே வீச்சில் கொன்றதாகக்
கன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. பல்லவ அரசு கவிழ்ந்தது.
பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி
ஆதித்தன் சோழ நாட்டுடன் இணைத்துக்கொண்டான். சோழ நாட்டெல்லை
விரிவடைந்து வடக்கே இராஷ்டிரகூடரின் ஆட்சி வரம்பை எட்டி நின்றது
(கி.பி. 890).

    ஆதித்தன் கண்ட வெற்றிகட்கெல்லாம் அவனுக்குக் கங்கர்கள் துணை
நின்றனர். ஆதித்தன் ‘இராசகேசரி’ என்ற விருது ஒன்றை ஏற்றான். பல்லவ
இளவரசி ஒருத்தி ஆதித்தனுக்கு மண முடிக்கப் பெற்றாள். இராஷ்டிரகூட
மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் என்கிற வல்லவரையன் மகள் இளங்கோன்
பிச்சி என்பவளை ஆதித்தன் தன் பட்டத்தரசியாக ஏற்றுக்கொண்டான்.

     2. S. I. I. II. 76. Marxe. 18.