12. சோழப் பேரரசின் தோற்றம் விசயாலய சோழன் (கி.பி. 850-871) தஞ்சையைக் கைப்பற்றித் தன் வெற்றியின் சின்னமாக நிசும்பசூதினி என்ற கோயிலை எழுப்பினான்.1 இவ் வெற்றிக்கு முன்பு தஞ்சாவூர்ப் பகுதி முழுவதும் முத்தரையரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. முத்தரையர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற இடத்திலிருந்து தஞ்சையை ஆண்டு வந்தனர். அவர்கள் அரசியல் சூதாட்டத்தில் கைவந்தவர்கள். அவர்களுடைய அரசியல் சார்பு மாறிக் கொண்டே இருந்தது. பல்லவருடனோ அன்றிப் பாண்டியருடனோ துணைபூண்டு பிற மன்னரைப் பொருவார்கள். பல்லவருக்கும், வரகுண பாண்டியனுக்குமிடையே விளைந்த போரில் முத்தரையர்கள் பாண்டியருடன் இணைந்தனர். அப்போது விசயாலயன் பல்லவருக்குத் துணை நின்றான். போரில் விசயலாயன் வெற்றி கண்டான். தஞ்சாவூரைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு ஆக்கத்தையும் விரிவையும் தேடிக்கொண்டான். உறையூருக்கு அண்மையில் தங்கீழ் ஒரு குறுநில மன்னனாகத் திறை செலுத்தி முடங்கிக்கிடந்த விசயாலயனின் கைகள் இவ் வெற்றியால் மிகவும் வலுவடைந்துவிடும் என்று பல்லவர்கள் எதிர்பார்த்தவர்களல்லர். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஈடிணையற்ற பெரும் புகழை ஈட்டிக்கொண்ட சோழப் பேரரசர் பரம்பரை யொன்றைத் தான் தொடங்கி வைக்க விருந்ததை விசயாலயனும் கனவுகூடக் கண்டிருக்கமாட்டான். விசயாலயன் வெற்றியின் காரணமாக முத்தரையரின் கை ஒடுங்கிவிட்டது. முத்தரையரின் போர்த் துணையைப் பெற்றிருந்த வரகுண பாண்டியன் மீண்டும் ஒருமுறை வடக்கே பல்லவரின்மேல் படையெடுத்து வந்தான். பல்லவ மன்னனான அபராசிதன் தனக்குத் துணை நின்ற மன்னர் அனைவரையும் ஒன்று கூட்டினான். அவனுக்குத் துணைபுரிய எழுந்தவர்களுள் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியும் ஒருவன். பல்லவருக்கும் கங்கருக்குமிடையே நீண்ட காலமாகவே நல்லுறவு நீடித்து வந்தது. இந் நிகழ்ச்சிகளுக்கிடையில் விசயாலயன் காலமானான். அவனை 1. S. I. I. III. No.205 |