சபைகள் அமைக்கப்பட்டிருந்தன. இச் சபைகளின் கீழ்ப் பல வாரியங்கள் (குழுக்கள்) செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு வாரியமும் ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொண்டு செய்து வந்தது. ஏரி வாரியம் ஏரியின் நிருவாகத்தை நடத்தி வந்தது. தோட்ட வாரியம் தோட்டக் கால்களை நிருவகித்து வந்தது. வாரியங்கள் அல்லாமல் ‘அருங்கணத்தார்’ என்றும் ஒரு குழுவினர் இருந்து வந்தனர். கல்வியறிவிற் சிறந்தவர்கள் இக் குழுவில் உறுப்பினராக அமர்ந்திருந்தனர். நிலங்களை வாங்குவதும் விற்பதும் இவர்களுடைய கடமையாகும். ஒவ்வொரு கிராமமும் வீடுகள், தோட்டங்கள், குளம் குட்டைகள், ஏரிகள், புறம்போக்குகள், பொதுக் குளங்கள், குற்றுக் காடுகள், நீரூற்றுகள், வாய்க்கால்கள், கோயில்கள், கோயில் நிலங்கள், கடைகள், தெருக்கள், சுடுகாடுகள், இடுகாடுகள், நன்செய் புன்செய் நிலங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலப்பரப்பாகும். கிராமங்கள் அளந்து எல்லையிடப்பட்டன. கோயில்களுக்கும் பிராமணருக்கும் தானமாக விடப்பட்ட நிலங்கள் தனியாகப் பதிவு செய்யப்பட்டன. கோயிலைக் கொண்டு பலதரப்பட்ட மக்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். காபாலி சைவர்கள் கோயில்களில் உண்பது வழக்கம். பல மடங்கள் கோயில்களுடன் தொடர்புகொண்டு நடைபெற்றுவந்தன. காஞ்சிபுரத்துத் திருமேற்றளி மடமும், கொடும்பாளூர்க் காளாமுகர் மடமும் இத்தகைய நிறுவனங்களாம். கோயில்கள் பல்லவ மன்னரும் அவர்களுடைய குடிமக்களும் கோயில் வழிபாட்டில் மிக்க ஈடுபாடுடையவர்களாய் இருந்தனர். காஞ்சிபுரத்திலும் வேறு பல இடங்களிலும் கோயில்கள் எழுப்பப்பட்டன. கோயில்கள் அருச்சகர்கள், பணி செய்வோர், கூத்திகள் ஆகியவர்கட்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. கூத்திகளுக்கு அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர், உருத்திர கணிகையர் என்றும் பெயர்கள் உண்டு. சோழர்களின் கல்வெட்டுகளில் பெரும்பாலும் இவர்களுக்குத் ‘தேவரடியார்’ என்ற பெயரே வழங்கி வந்தது. வாழ்க்கையில் சில நெருக்கடிகள் நிகழும்போது தெய்வங்கட்கு உயிர்ப்பலியூட்டும் வழக்கம் உலகம் முழுவதிலும் காணப்பட்ட தொன்றாகும் என்பதைப் பண்டைய மக்களின் வரலாறுகள் எடுத்துக் கூறுகின்றன. தமிழகம் இதற்கு விலக்கு அன்று. |