பக்கம் எண் :

254தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

இடையில் பரவியிருந்த நிலப்பகுதியில் ஒடுங்கி நின்றது. இவர்களுடைய
நாட்டுக்குப் பெரும்பாணப்பாடி என்று பெயர். வாணகோவரின் ஆட்சியானது
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றது. இப் பரம்பரையில்
இறுதியாக அரியணை ஏறியவன் மூன்றாம் விக்கிரமாதித்தன் ஆவான். இவன்
இராஷ்டிரகூடமன்னன் கிருஷ்ணனுடன் நெருங்கிய நட்புறவு பூண்டிருந்தான்.

     கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி பராந்தகனிடம் வாணாதிராசன்
என்ற வீர விருதைப் பெற்றுப் பிறகு சிறிது காலம் வாணர்களிடம் (Banas)
திறை பெற்று வந்தான். இரண்டாம் விக்கிரமாதித்தனும், மூன்றாம்
விசயாதித்தனுமான இரு வாண மன்னர்கள் பெரும்பாணப்பாடியைப்
பராந்தகனுக்குப் பறிகொடுத்துவிட்டு இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம்
கிருஷ்ணனிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.

     பராந்தக சோழன் வாணகோவரின்மேல் போர் தொடுக்க எழுந்தபோது
அவனுக்கு வைதும்பர் என்ற தெலுங்கு மன்னரின் எதிர்ப்பை முதலில்
முறியடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வைதும்பர்கள் என்பவர்கள்
ரேநாண்டு-7000 என்ற நாட்டை ஆண்டு வந்தவர்கள் ; வாணகோவரின்
துணைவர்கள், பெரும்பாணப்பாடியின்மேல் பராந்தகன் படையெடுத்தபோது
சந்தயன் திருவயன் என்பவனோ அன்றி அவனுக்கு முற்பட்டு இருந்த
ஒருவனோ மன்னனாக ஆட்சிபுரிந்து வந்திருக்க வேண்டும். சோழரின் கடும்
தாக்குதலைத் தாங்கமுடியாதவனாய் வைதும்பனும் இராஷ்டிரகூடனிடம் சரண்
புகுந்தான்.

     பராந்தக சோழனின் பேரரசு வெகுவிரைவில் வளர்ந்து வந்து ஐம்பது
ஆண்டுக்கால அளவில் மிகவும் விரிவடைந்து விட்டது. அது வெகு துரிதமாக
வளர்ந்து வந்ததால் நாடு முழுவதிலும் வலிமையானதோர் அடிப்படையில்
ஆங்காங்கு அரசாங்கத்தை நிறுவுவதற்குப் பராந்தகனுக்குக் காலமும்
வாய்ப்பும் போதவில்லை. அவனுடைய வெம்போர்த் தாக்குதல்களைத்
தாங்கவியலாதவராகி நாடு கடந்தோடிய மன்னர்கள் அவன்மீது பழிவாங்கக்
காலங்கருதிவந்தனர். பராந்தகனின் போர் ஆற்றலின் பெருக்கமானது
இராஷ்டிரகூடர்கள், கீழைச் சளுக்கியர்கள் ஆகியவர்களுடைய நெஞ்சில்
அச்சத்தையும் வஞ்சத்தையும் மூட்டிவிட்டது. வாணரும் வைதும்பரும் தனக்கு
அஞ்சி ஓடி ஒளிந்து வாழ்ந்து வந்ததையும், அதனால் ஏற்படக் கூடிய
விளைவுகளையும் பராந்தகன் நன்கு அறிந்திருந்தான்.