மேலைக் கங்கர் வேறு அவனுக்குத் தொல்லை கொடுக்க முனைந்தனர். அவர்களுடைய மன்னனான பெருமானடிகளும் சோழ நாட்டு எல்லைக்குள் புகுந்து ஆனிரைகளைக் கவர்ந்தோடத் தொடங்கினான். வடஆர்க்காடு மாவட்டத்தில் நிகழ்ந்த கங்க மன்னனின் பசுக் கவரும் படையெடுப்பு ஒன்றின்போது சோழ மறவன் ஒருவன் அவனை எதிர்த்துப் போராடிப் போர்க்களத்தில் புண்பட்டிருந்தான். அவனுடைய தொண்டின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டிய பராந்தகன் அவனுக்கு வீரக்கல் ஒன்று எடுப்பித்தான்.6 சோழ நாட்டின்மேல் சுழன்று, புரண்டு வீசத் தொடங்கிய பகைப்புயலைப் பராந்தகன் நன்கு அறிந்துகொண்டு முன்னராகவே தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலானான். திருமுனைப்பாடி நாட்டில் அவன் தன் மூத்தமகன் இராசாதித்தனை ஒரு பெரும் படையின் தலைமையில் நிலைப்படுத்தியிருந்தான். அப் படையில் யானையணிகளும், குதிரையணிகளும் அடங்கியிருந்தன. இராசாதித்தனின் தண்டுகள் திருமுனைப்பாடி நாட்டில் சுந்தரமூர்த்தி நாயனாரின் பிறப்பிடமாகிய திருநாவலூரில் பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவ்வூர் கி.பி. 1140 வரையில் இராசாதித்தபுரம் என்னும் பெயரிலேயே விளங்கி வந்தது. பல ஆண்டுகளாகத் திரண்டு உருவாகிக்கொண்ட பகைப்புயல் இறுதியாகச் சோழ நாட்டின்மேல் தாக்கிப் புடைக்கத் தொடங்கிற்று. பகைப் படைகள் இராசாதித்தனைத் தக்கோலம் என்னும் இடத்தில் எதிர்த்து நின்றன. அங்கப் பெரும் போர் விளைந்தது (கி.பி. 949). தக்கோலம் என்னும் ஊர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் அரக்கோணத்துக்குச் சுமார் பத்துக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தக்கோலத்துக்குத் ‘திருவூறல்’ என்றொரு பழம் பெயர் உண்டு. இவ்வூர் உமாபதி ஈசுவரர் கோயிலின் நந்திச் சிலையொன்றின் வாயிலிருந்து எப்பொழுதும் தண்ணீர் வடிந்துகொண்டே இருக்கும். மிக அண்மையிற்றான் இவ்வூற்று வறண்டுவிட்டது. எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருந்ததால் இவ்வூர் திருவூறல் என்னும் பெயரெய்திற்று. தக்கோலத்துப் போரில் இரு படைகளின் கைகலப்பும் மிகக் கடுமையாய் இருந்தது. போர் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இராஷ்டிரகூடப் படைத்தலைவர்களுள் பூதுகன் என்பான் ஒருவன் இராசாதித்தன் அமர்ந்திருந்த யானையின்மேல் துள்ளியேறி இராசாதித்தனைக் கத்தியால் 6. Ep. Ind. IV. P. 22 B. |