பக்கம் எண் :

256தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

குத்திக் கொன்றான். போரின் முடிவில் வெற்றிவாகை இராஷ்டிரகூடனுக்குக்
கிடைத்தது. அவனும் தன் படைத் தலைவனான பூதுகன் தனக்காற்றிய அரிய
தொண்டுக்காகவும் அவன் துணிவைப் பாராட்டியும் அவனுக்கு வனவாசி
12,000, வெள்வோணம்-300 ஆகிய நாடுகளை வழங்கித் தன் நன்றியைத்
தெரிவித்துக்கொண்டான். தக்கோலத்துப் போரில் இராசாதித்தன்
‘வீரசொர்க்கம்’ அடைந்ததாகத் திருவாலங்காட்டுச் செப்பேடும், லீடன்
செப்பேடும் கூறுகின்றன. சோழ நாட்டின் பெரும்பகுதிகளை இராஷ்டிரகூடரும்
அவர்களுடைய போர்த் துணைவர்களும் தமக்குள் பங்கு
போட்டுக்கொண்டனர்.

     தக்கோலத்துப் போர்முனையில் உயிரிழந்த இராசாதித்தனின்
அன்னையின் பெயர் கோக்கிழான் அடிகள். பராந்தகனின் மற்றொரு மனைவி
கேரளத்து அரசிளங்குமரியாவாள். இவள் மகன் அரிஞ்சயன். இவளுடைய
செல்வாக்கின் துணை கொண்டு சேர நாட்டவர் பெருந்தொகையில்
தமிழகத்தில் ஆங்காங்குக் குடியேறினர். பலர் அரண்மனையில் பணியாளராக
அமர்ந்தனர். சேர நாட்டைச் சேர்ந்தவனான வெள்ளன் குமரன் என்பான்
ஒருவன் இராசாதித்தனுக்குப் படைத்தலைவனாகப் பணியாற்றிக்
கொண்டிருந்தான். இவன் திருநாவலூருக்கு அண்மையில் கிராமம் என்ற
இடத்தில் கோயில் ஒன்று எழுப்பினான். இவனே பிறகு துறவுபூண்டு
திருவொற்றியூரில் மடம் ஒன்று எழுப்பிச் சதுரானன பண்டிதர் என்ற தீட்சைப்
பெயரில் அம் மடத்தின் தலைவனானான். இவனைத் தொடர்ந்து சேர நாட்டுக்
குடிகள் பலர் கோயில்களுக்குச் சிறு சிறு நிவந்தங்கள் அளித்து வந்தனர்.
இராசாதித்தனைத் தவிர்த்துப் பராந்தகனுக்கு ஆண் மக்கள் வேறு நால்வரும்,
பெண் மக்கள் இருவரும் உண்டு. ஆண் மக்கள் கண்டராதித்தன்,
அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிஞ்சயன் ஆவர். பெண் மக்கள் வீரமாதேவியும்
அநுபமாவும் ஆவர். வீரமாதேவி கோவிந்த வல்லவராயருக்கும், அநுபமா
கொடும்பாளூர்க் குறுநில மன்னன் ஒருவனுக்கும் வாழ்க்கைப்பட்டனர்.

     முதலாம் பராந்தகன் கி.பி. 955 ஆண்டுவரையில் உயிர்
வாழ்ந்திருந்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகளால் அறிகின்றோம். இவன் தன்
ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஆற்றிய நன்மைகள் பல. ஊராட்சி முறையைத்
திருத்தியமைத்து, அதனுடைய நடைமுறை விதிகளையும் அறுதியிட்டான்
என்று உத்தர

     7. Ep.Ind.XXVII. p.47
     8. Ep. Ind. XI p. 24.