பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 269

பட்டுள்ள வடிவம் கி.பி. 868ஆம் ஆண்டுக்குப் பிந்தியதாகக்
காணப்படுகின்றது. எழுத்து வடிவமும் இராசராசன் காலத்திய தமிழ் எழுத்து
வடிவமாகக் காணப்படுகின்றது. அவன் காலத்துக்கு முன்பு வட்டெழுத்துகளே
அப் பகுதியில் வழங்கி வந்தன. அச் சாசனம் கருநந்தடக்கன் காலத்ததாக
இருந்திருக்குமானால் அது வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இக் காரணத்தாலும், வேறு சில காரணங்களாலும் இச் சாசனமும் முதலாம்
இராசராசன் காலத்தில் கருநந்தடக்கன் பெயரில் வேறு ஒரு மன்னன்
பொறித்துக் கொடுத்ததாகக் கொள்ள வேண்டும்.

     எனவே, பார்த்திவசேகரபுரத்திலிருந்த சாலையைப் போலவே அதற்கு
முன்மாதிரியாக அமைந்திருந்த காந்தளூர்ச் சாலையையும் இராசராச சோழன்
தன்னுடைய ஆணையின் கீழ்க் கொண்டுவந்து, அதனிடம் இருந்த படை
பலத்தைக் குறைத்துச் சாலையின் நடைமுறையிலேயே பெரிய மாறுதல்களைச்
செய்து சாலையைச் சீர்திருத்தி அமைத்திருக்க வேண்டும். முதலாம்
இராசராசனின் மெய்க்கீர்த்திகளில், ‘காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளிய’
என்னும் சொற்றொடர்கள் அவனுடைய இந்தச் சிறப்பான பணிகளைக்
குறிப்பிடுகின்றன என்று கொள்ளுவதே பொருத்தமானதெனக் கொள்ளலாம்.

     இராசராசன் அடுத்துக் கொல்லத்தைக் கைப்பற்றினான். பாண்டி
நாட்டின்மேல் வெற்றி காண்பதையே தம் பெரு நோக்கமாகக்
கொண்டிருந்தவர்கள் சோழர்கள். எனவே, இராசராசன் பாண்டி நாட்டின்மேல்
தன் படைகளைத் திருப்பினான்; மதுரையைத் தாக்கி அழித்தான் ; பாண்டியன்
அமரபுசங்கனின் செருக்கை ஒடுக்கினான். பாண்டியனுக்குப் பக்கபலமாக நின்று
வந்த சேரனின் போர்த் திறனையும் ஒடுக்கினாலன்றிப் பாண்டி நாட்டு வெற்றி
முழுப் பலனைத் தாராதெனக் கண்ட இராசராசன் சேர நாட்டின்மேல்
படையெடுத்தான். குடநாடு அல்லது குடமலை நாட்டைக் கைப்பற்றி உதகை
என்ற மலைக்கோட்டையை அவன் தகர்த்தான். ஆங்குத் தன் ஆட்சியை
நிறுவிய பின்பு தான் பிறந்த நாண்மீனாகிய சதயந்தோறும் கேரளத்தில் விழா
எடுப்பிக்க ஏற்பாடுகள் செய்தான். பதினெட்டுக் காடுகளைக் கடந்து சென்று,
தன் தூதுவனுக்காக இராசராசன் உதகையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்
என்று ஒட்டக்கூத்தர் தம் மூவருலாவில் கூறுகின்றார். இராசராசன்
தூதுவனைச் சேரன் இழித்துப் பேசி இருக்க வேண்டும் என்றும், அதைக்
கேட்ட சோழன் அதையே காரணமாகக்