பக்கம் எண் :

296தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

பெயர் வழங்கி வருகின்றது. மாடவீதிகளுள் ஒன்றுக்கும் இவனுடைய பெயர்
வழங்கியதாக இச் சோழனின் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. விக்கிரமன்
திருவரங்கத்து அரங்கநாதர் கோயிலின் ஐந்தாம் திருச்சுற்றைக் கட்டினான்
என்று கோயிலொழுகு கூறுகின்றது.

    விக்கிரம சோழனுக்குப் பல குறுநில மன்னர்கள் திறை செலுத்தி
வந்தனரென விக்கிரம சோழன் உலாக் கூறுகின்றது. சூரை நாயகன் என்கிற
மாதவராயன், செங்கேணில் பரம்பரையினரான சம்புவராயர்கள்,
திருக்காளத்தியின் அண்மையில் அரசாண்ட யாதவராயரின் முன்னோர்கள்
அக் குறுநில மன்னருள் சிலர் ஆவர்.

இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1135-50)

    விக்கிரம சோழனை யடுத்து அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன்
அரியணை ஏறினான். முடிசூட்டு விழா சிதம்பரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குலோத்துங்கன் நடராசர் கோயிலுக்குப் பெரிய திருப்பணிகள் ஆற்றினான்.
திருச்சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான். நடராசர் கோயிலுக்குள்
தெற்றியம்பலத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிந்தராசப் பெருமானின்
சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் எறிவித்தான்.

    இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் நாட்டில் கலகங்கள், கிளர்ச்சிகள்
ஒன்றும் எழவில்லை. சைவ வைணவப் பூசல்கள் மட்டும் தலைதூக்கி நின்றன.
பொதுவாக நாட்டில் அமைதி நிலவிற்று ; குடிநலம் ஓங்கிற்று. இவன்
காலத்தில் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் வாழ்ந்திருந்தனர். இவனுடைய
ஆட்சி கி.பி. 1150-ல் முடிவுற்றது.

இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173)

    இரண்டாம் குலோத்துங்கனின் வாணாள் முடிவதற்கு நான்காண்டுகட்கு
முன்பே அவனுடைய மகன் இரண்டாம் இராசராசன் ஆட்சிப்பொறுப்புகளை
ஏற்று நடத்தி வந்தான். அவன் நாட்டிய கல்வெட்டுகள் கி.பி. 1146 ஆம்
ஆண்டு முதற்கொண்டே காணப்படுகின்றன. அவனுடன் அரியணையில்
அமர்ந்திருந்தவள் அவனிமுழுதுடையாள் என்ற அரசியாவாள்.
அவளையன்றிப் புவனமுழுதுடையாள், தரணிமுழுதுடையாள், உலகுடைமுக்
கோக்கிழாள் என்று இராசராசனுக்கு வேறு மூன்று மனைவியருமுண்டு. அவன்
முத்தமிழ்த்தலைவன் என்னும் விருது ஒன்றைப்