பாண்டி நாட்டின்மேல் ஏவி, அந் நாட்டின் பல இடங்களை அழித்தான். மதுரையில் எழுப்பப்பட்டிருந்த முடிசூட்டு விழா மண்டபத்தை இடித்து நிரவினான். சடாவர்மன் படுதோல்வி யடைந்தான். எனினும், சோழன் பாண்டி நாட்டு ஆட்சியை அவனிடமே ஒப்படைத்தான் (கி.பி. 1205). குலோத்துங்கன் ஆந்திர நாட்டின் மேலும் ஒருமுறை படையெடுக்க வேண்டியிருந்தது (கி.பி. 1208). பாண்டியர்கள் சோழரை எதிர்த்துச் செய்துவந்த கிளர்ச்சிகள் ஓய்வு காணவில்லை. சடாவர்மன் சுந்தரபாண்டியனை யடுத்து அவன் தம்பி முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணையேறி இருந்தான். சோழரின் மேலாட்சிக்கு இறுதி ஒன்றைக் காணும் முயற்சியில் அவன் முழுமூச்சுடன் இறங்கினான். சோழ நாட்டின்மேல் படையெடுத்துப் போரில் வெற்றி கண்டான். குலோத்துங்கன் தோல்வியுற்றான். சோழர்களுக்குத் தக்க காலத்தில் போசளர்களின் படைத்துணை கிடைத்தது. எனவே, சுந்தர பாண்டியன் தான் பெற்ற வெற்றியின் பயன் முழுவதையும் துய்க்கும் வாய்ப்பைப் பெற்றிலன். குலோத்துங்கன் பேராற்றலும், நுண்ணறிவும், அரசியல் சூழ்ச்சித் திறனும் வாய்க்கப் பெற்றவன். அவனுடைய ஆட்சிக் காலம் முழுவதும் பாண்டியரின் பகையைத் தேய்த்துத் தன் வலியைப் பெருக்கிக் கொள்ளுவதிலேயே கழிந்தது. ‘மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய’ என்ற விருது ஒன்றைத் தன் பேருடன் இணைத்துக் கொண்டான். தனக்குத் திறை செலுத்திவந்த மன்னர்கள் தன்னை மீறாதவாறு அவர்களை ஒடுக்கி வந்தானாயினும், தெலுங்குச் சோடர்கள், பாணர்கள், சம்புவராயர்கள், காடவர்கள், மலையமான்கள், அதிகமான்கள் ஆகிய குறுநில மன்னர்கள் படிப்படியாகத் தம் அரசாதிக்கத்தை வளர்த்து வந்தனர். சோழரது பேரரசின் ஆட்சியும் தளர்ச்சியுற்று வந்தது. மூன்றாம் குலேத்துங்கன் காலத்திலும் கங்கைகொண்ட சோழபுரமே சோழப் பேரரசின் தலைநகரமாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. சோழ நாட்டில் இரண்டாண்டுக் காலம் (கி.பி. 1201-2) கொடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டுக் குடிமக்கள் அவதியுற்றனர். பஞ்ச நிவாரணப் பணிகள் பல அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. தனிப்பட்டவர்களும் நிவாரணப் பணியில் பங்கு கொண்டனர். |