ஏற்ப அமைகின்றது என்பதும் உண்மை. அரிஸ்டாட்டில், கோபினோ, போடின், மான்டஸ்கியூ ஆகிய அறிஞர்கள் இவ்வுண்மையில் பெருநம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்குச் சார்பாகப் பல சான்றுகள் உலக வரலாற்றிலும் காணக் கிடக்கின்றன. குன்றுகளிலும் காடுகளிலும் கடலோரங்களிலும் வாழும் மக்கள் உழுது பயிரிட்டு நாடு நகரங்களை அமைத்து வாழும் மக்களைவிட நாகரிகத்தில் தாழ்ந்தவராகவே காணப்படுகின்றனர். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், கலைகளை வளர்த்துக் கொள்ளவும், அயலாருடன் தொடர்பு கொள்ளவும், ஆற்றோர வெளிகளில் வாழ்ந்துவந்த உழவர்களுக்கே வாய்ப்புகள் மலிந்திருந்தன என்ற உண்மையை வரலாற்றுச் சான்றுகள் பல விளக்குகின்றன. உழவுத்தொழிலே நாகரிகத்தின் உயர்ந்த சின்னமாகக் கருதப்பட்டது. ‘சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்’1 என்றும், ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ; மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’2 என்றும் உழவைப் பாராட்டிப் புகழ்ந்தது பழந்தமிழரின் பண்பாடாகும். பழந்தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய நகரங்கள் யாவும் ஆற்றோரங்களிலேயே அமைந்து வளர்ந்து வந்திருக்கின்றன. உழவுத்தொழிலுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்பட்டிருந்த நெருங்கிய தொடர்புக்கு இஃதோர் சிறந்த சான்றாகும். சமவெளிகளும், காடும், மலையும், கடலும் மக்களுக்கு உணவுப் பண்டங்களையும் அவர்கட்கு வேண்டிய ஏனைய வாழ்க்கை வசதிகளையும் வழங்கின. ஆற்றோரங்களிலும் உள்நாட்டு நன்செய் நிலங்களிலும் நெல்லும் கரும்பும் பயிராயின. புன்செய்ப் பயிர்களான கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, வரகு, சோளம், துவரை, மொச்சை ஆகியவை சமவெளிகளிலும் மலையிலும் காட்டிலும் விளைந்தன. பயறு வகைகளும், பருத்தியும் எந்த வகையான நிலத்திலும் பயிராகக் கூடியன. மயிற்பீலி, யானைத் தந்தம், கட்டடமரம், கடுக்காய், நெல்லிக்காய் போன்ற மருத்துவச் சரக்குகள் காடுபடு பொருள்கள். பண்டைக் காலத்தில் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கும் சீனாவுக்குமிடையே கடல் வாணிகம் நடைபெற்று வந்தது. 1. குறள், 1031. 2. குறள், 1033 |