பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 301

கோபய்யாவும் இராசராச சோழனைச் சிறையினின்றும் விடுவித்துக்
கோப்பெருஞ்சிங்கனுக்குத் துணையாக வந்தவனான சிங்களத்து இளவரசன்
ஒருவனையும் கொன்றனர். சோழநாட்டைக் காடவனிடமிருந்து மீட்டு
நிலைநிறுத்தின தன் பெருமையைப் பாராட்டிக் கொள்ளும் வகையில்
நரசிம்மன் ‘சோழ ராச்சிய பிரதிஷ்டாபனாசாரியன்’ என்றொரு விருதைப்
புனைந்தான். அவன் பாண்டி நாட்டைத் தாக்கிப் பாண்டி மன்னனை
அடிபணிய வைத்து அவனிடம் திறை கவர்ந்தான். எனினும், அவனுடன்
திருமணத் தொடர்புகள் மேற்கொண்டான். இயல்பாகவே பாண்டிய-போசள
உறவுகள் வலுவுற்றன. போசளருக்குக் கீழ்ப் பட்டதொரு நிலைக்குச் சோழர்
இருந்து வரலானார்கள். சோழரின் மேலாட்சி தளர்வுற்றவுடனே சோழப்
பேரரசுக்குத் திறை செலுத்தி வந்த நாடுகள் யாவும் சுதந்தரம் பெற்றுக்
கொண்டன. பாண்டியரின் உறவையும் சோழரின் பணிவையும் பெற்ற போசள
மன்னனுக்குத் தமிழகத்தில் செருக்கும் செல்வாக்கும் அதுவரையில்
காணப்படாத அளவு உயர்ந்து வந்தன. இரண்டாம் நரசிம்மனின் மகன்
(கி.பி.1234-63) தமிழகத்திலேயே, திருச்சிராப்பள்ளியை யடுத்த கண்ணனூரில்
தங்கிச் சோழரின் ஆட்சியில் அடிக்கடி தலையிட்டுத் தன் அரசியல்
ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தான். இந் நிலையில் மூன்றாம் இராசராசனின் வாணாள்
முடிவுற்றது ; மூன்றாம் இராசேந்திரனின் ஆட்சி தொடங்கிற்று.

மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1246- 1279)

    மூன்றாம் இராசேந்திரன் தன் செல்வாக்கை மீண்டும் உயர்த்திக்
கொள்ளும் பொருட்டுத் தெலுங்குச் சோடரின் துணையை நாடினான்.
பாண்டியரின் சார்பில் போசளர் படைபலம் வழங்கி வந்தும் இராசராசன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனைப் போரில் புறங்கண்டு சோழரின்
தாழ்வுற்ற கொடியை நிமிர்த்தி நாட்டினான். இப் பாண்டியனை யடுத்து
முதலாம் சடாவர்மன் சுந்தரபாண்டியன் பட்டமெய்தினான். அவன் ஆட்சி
யரியணையில் அமர்ந்தவுடனே நரசிம்மனையடுத்துப் போசளர் மன்னனான
சோமேசுவரனின் அரசியலில் மாறாட்டம் ஒன்று கண்டது. அவன்
பாண்டியரைக் கைவிட்டுச் சோழரின் நட்புறவுக்குத் தாவினான்.
சோழப்பேரரசுக்கு வடக்கில் ஒரு தொல்லை ஏற்பட்டது. காகதீய மன்னன்
கணபதி என்பான் கி.பி. 1250-ல் காஞ்சியைக் கைப்பற்றினான். சடாவர்மன்
சுந்தரபாண்டியனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவன் மிகவும்
பெரியதொரு படை திரட்டிக்கொண்டு சோழநாட்டின் மேல் பாய்ந்தான்.
சோமேசுவரன் போர்க்களத்தில் புண்பட்டு