வீரமரணம் எய்தினான். பாண்டியன் சோழரின் படைகளை முறியடித்தான். கோப்பெருஞ்சிங்கனிடம் திறை கவர்ந்து அவனைத் தனக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னருள் ஒருவனாக்கினான். வெற்றியினால் ஊக்கப்பட்டு அவன் மேலும் வடக்கு நோக்கிப் படை செலுத்திச் சென்றான். தெலுங்குச் சோடருடன் கைகலந்து அவர்களை வீழ்த்தினான். காஞ்சியைக் கைப்பற்றியிருந்த காகதீயரை நகரைவிட்டு விரட்டியோட்டினான். மேலும் வடக்கே சென்று இப் பாண்டியன் நெல்லூரையும் கைப்பற்றினான். இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் எழுப்பிய வெற்றிக் கோட்டைகள் சரிந்தன. சோழப் பேரரசு சிதறுண்டது ; பாண்டி நாட்டுக்குத் திறை செலுத்துமளவுக்கு அதன் ஆக்கம் குன்றிவிட்டது. கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) பாண்டியரும், போசளரும், காகதீயரும் மேற்கொண்ட அரசியற் சூதாட்ட அரங்கில் காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கனின் பெயரானது சுடர்விட்டு ஒளிர்கின்றது. சோழர், பாண்டியர், போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகை சூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான். பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலக்ஷிமீலுண்டாகன், காடககுல திலகன், பெண்ணானதீநாதன் என்பன அவற்றுள் சிலவாம். கோப்பெருஞ்சிங்கன் தென்னார்க்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான். பல்லவர் அல்லது காடு வெட்டிகள் பரம்பரையில் தான் தோன்றியதாகப் பெருமை பிதற்றி வந்தான். தெற்கில் தஞ்சாவூர் மாவட்டம் முதல் வடக்கே கோதாவரி மாவட்டம் வரையில் இவனுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோப்பெருஞ்சிங்கனுக்குச் சிதம்பரம் நடராசரிடம் அளவு கடந்த அன்புண்டு. சிதம்பரம் கோயிலின் தெற்குக் கோபுரத்தை எழுப்பிய பெருமை இவனையே சாரும். இவன் தனக்குப் பரதமல்லன் என்ற விருது ஒன்றை இணைத்துக்கொண்டது நேர்மையானதென்றே கொள்ள வேண்டியது. இராசராச சோழமன்னன்கீழ்க் குறுநிலமன்னனாகத் தன் ஆட்சியைத் தொடங்கிய கோப்பெருஞ்சிங்கன், அப் பேரரசனையே தெள்ளாற்றுப் போரில் தோல்வியுறச் செய்தான் (கி.பி. 1231). அவனைச் சேந்தமங்கலத்தில் சிறையிட்டும் வைத்தான். போசள நரசிம்மன் சோழர் சார்பில் தலையிட்டதன் |