பேரில் இராசராசனைக் கோப்பெருஞ்சிங்கன் சிறையினின்றும் விடுவித்தான். ஆனால், மீண்டும் சோழப் பேரரசுக்குத் தலை வணங்கினான். எனினும், தன் விடாமுயற்சியை அவன் கைவிட்டானல்லன். பெரம்பலூர் என்னும் இடத்தில் போசளருடன் போர் தொடுத்து அவர்களைத் தோல்வியுறச் செய்து அவர்களுடைய மகளிரையும் சிறைபிடித்துச் சென்றான். அப்போரில் தான் இழைத்த கொடுமைகளுக்குக் கழுவாயாகப் பழமலைநாதருக்குப் பல நிவந்தங்கள் வழங்கினான். கோப்பெருஞ்சிங்கனின் வாழ்க்கையில் விதி விளையாடிற்று. சடாவர்மன் சுந்தர பாண்டியன் சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான் (கி.பி. 1255). கோப்பெருஞ்சிங்கன் மீண்டும் வேற்றரசு ஒன்றுக்கு அடிமையானான். பாண்டிய மன்னனின் வடக்கத்திய போர்முனைகளுக்குத் தன் படைத்துணையையும் நல்கினான். பாண்டியர்கள் தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பம் ஒன்றை இக்காலத்தில் காண்கிறோம். சோழர் குலம் தாழ்கின்றது; பாண்டியர் குலம் உயர்கின்றது; கங்கை கொண்ட சோழபுரத்தில் வளர்ந்து கொண்டிருந்த சோழரின் கொற்றம் மங்கி விடுகின்றது. சடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டி நாட்டுப் பேரரசு ஒன்றைத் தொடக்கிப் பண்டைய பாண்டியர் ஏற்றி வைத்துச் சென்ற புகழொளியைத் தூண்டிவிட்டான். சடாவர்மன் கி.பி. 1251-ல் அரியணை ஏறினான். வீரத்திலும், ஆட்சித் திறனிலும் அவனுக்கு இணை அவனேதான். பாண்டி நாட்டுப் பேரரசுக்கு இரண்டாம் முறையாகத் தமிழகத்தில் மட்டற்ற செல்வாக்கையும் சீரையும் தேடித் தந்தான். சோழரும் போசளரும் அவனுடைய வீரத்திற்கும் கொற்றத்துக்கும் தலை வணங்கினர். வடக்கே கிருஷ்ணை நதிவரையில் இவனுடைய ஆட்சி ஓங்கி நின்றது. காடவரையும், தெலுங்குச் சோடரையும் வென்று நெல்லூரில் அவன் வெற்றி நீராட்டு விழா அயர்ந்தான். இராசேந்திர சோழனின் வாணாளின் இறுதிக்குள் பாண்டியப் பேரரசு அரசியல் வானில் கதிரவன்போல் சுடர்விட்டு ஒளிர்ந்தது. சீனரும் அரபியரும் தம் வரலாறுகளில் இக் காலத்துப் பாண்டியரின் ஆக்கத்தைக் குறிப்பிட்டுள்ளனர். மூன்றாம் இராசேந்திரனுக்குப் பின் சோழநாடு முடிசூட்டு விழா ஒன்றைக் கொண்டாடும் பேற்றை இழந்துவிட்டது. சோழ நாடானது பாண்டிய நாட்டுடன் இணைந்து ஞாயிற்றின் ஒளியில் கலந்த விளக்கொளியாகக் கரைந்துவிட்டது. |