பக்கம் எண் :

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் 313

    கிராமப் புறம்போக்கு நிலங்கள் யாவும் இச் சபைகளின் உடைமையாக
இருந்தன. தனிப்பட்டோர் நிலங்களையும் கண்காணிக்கும் உரிமை இச்
சபைகளுக்கு உண்டு. அரசாங்கம் ஏற்பாடு செய்த நில விற்பனை, நில தானம்
போன்ற உரிமை மாற்றங்கள் ஒழுங்காக முடிவு பெறுவதற்கு இச் சபைகள்
துணை புரிய வேண்டும். நிலங்களின் வருமானத்தைக் கணக்கிடுதல், வரி
விகிதங்களை அறுதியிடுதல், வரி தண்டுதல், வரி செலுத்தத் தவறியவர்களின்
நிலங்களைக் கைப்பற்றி விற்று விற்பனைத் தொகையை வரி நிலுவைக்கு
ஈடுகட்டிக் கொள்ளுதல் ஆகிய சீரிய கடமைகள் இச் சபையினரிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தன. மற்றும், காடுகொன்று நாடாக்குதல், தரிசு
நிலங்களை உழவுக்குக் கொண்டுவருதல், குடிமக்களின் நிலவுரிமைகள், பாசன
உரிமைகள் ஆகிய வேளாண்மை உரிமைகளை அறுதியிடுதல், குடிமக்களின்
வழக்குகளைத் தீர்த்துவைத்தல் ஆகிய பணிகளை இம் மகாசபைகள்
புரிந்துவந்தன. நில அளவைகளை மத்திய அரசாங்கமே மேற்கொண்டது.
எனினும் நில அளவையின்போது ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டிய
நிலவளம், நிலத்தரம் ஆகியவற்றுக்கு இச் சபையின் உடன்பாட்டை மத்திய
அரசாங்கம் பெற்றாக வேண்டும்.

    பொன்னை உரைகாண்பதற்கென்றே தனி வாரியம் ஒன்று
அமைக்கப்பட்டது. பொன் வாரியத்தின் உறுப்பினர்களும் குடவோலை
முறையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.22 இவ் வாரியத்தில் உறுப்பினர்
ஒன்பதின்மர் அமர்ந்து பணிபுரிந்தனர். மாதந்தோறும் ஏழரை மஞ்சாடிப்
பொன் இவர்கட்கு ஊதியமாக அளிக்கப்பட்டது. வயது கடந்தவர்களும்
சிறுவர்களும் பொன் வாரியத்திற்கு உறுப்பினராக முடியாது. இவ் வாரியத்தில்
உறுப்பினராக அமர்த்தப்பட்ட பெருமக்கள் ஒன்பதின்மரில் இருவர்
படைவீரர்கள்; மூவர் சங்கரபாடிகள் (வாணியர்கள் அல்லது செக்கர்) ஆவர்.
இப் பெருமக்கள் ஓரவஞ்சனையின்றிக் குடிமக்களின் பொன்னை மாற்றறியக்
கடமைப்பட்டவர்கள். இவர்கள் ஆற்றிய பணிகளுக்கும் சில விதிகள்
வகுக்கப்பட்டிருந்தன. அவர்கள் பொன்னை உரைக்கும் கட்டளைக்கல் மிகவும்
பெரியதாக இருக்கக்கூடாது; ஆணிக்கல்லையே அவர்கள் உரைகல்லாகப்
பயன்படுத்த வேண்டும்; அவ்வப்போது ஆணிக்கல்லை ஒற்றி எடுத்த மெழுகு
உண்டையானது பொன் துகளுடன் ஏரி வாரியப் பெருமக்களிடம்
ஒப்படைக்கப்பட வேண்டும்; பொன் வாரியப் பெருமக்கள் மூன்று திங்களுக்கு
ஒருமுறை ஆட்டை வாரியத்துக்கு

    22. Ep. Ind. XII. No. 24