பக்கம் எண் :

312தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

உரிமை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குடியிருந்த வீட்டுமனை
அவர்களுக்கே சொந்தமானதாக இருக்கவேண்டும் ; அவர்களுடைய வயது
முப்பத்தைந்துக்குக் குறைந்திருக்கக் கூடாது ; எழுபதுக்கு
மேற்பட்டிருக்கக்கூடாது. மேலும் அவர்கள் வேதத்துடன் தொடர்பு கொண்ட
மந்திர பிராமணங்களைப் பயின்றிருக்க வேண்டும் ; அல்லது குறைந்த அளவு
அரைக்கால் வேலி நில உரிமையும், ஒரு வேதத்தையோ, ஒரு பாடியத்தையோ
ஓதும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு சபை அல்லது
வாரியத்திலாவது மூன்றாண்டுகள் ஒருவர் உறுப்பினராக இருந்திருந்தால்
அவர் மீண்டும் உறுப்பினராக நியமனம் பெறும் உரிமையிழந்தவர் ஆவார்.
ஏற்கெனவே ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து
ஒழுங்காகக் கணக்குக் காட்டத் தவறியவர்களும், அவர்களுடைய
சுற்றத்தார்களும், பிறருடைய உரிமைகளைப் பறித்துக்கொண்டவர்களும்,
ஒழிந்த ஒழுக்கமுடையவர்களும் நியமனம் பெற உரிமையற்றவர்களாவார்கள்.
குடும்புகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் கூடிக் குடும்புக்கு
ஒருவராக மொத்தம் முப்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இக்
காலத்தைப் போலவே அக் காலத்திலும் வாக்குப்பதிவுமுறை ஒன்று பிராமணர்
கிராமங்களில் கையாளப்பட்டது. அம்முறைக்குக் ‘குடவோலை முறை’ என்று
பெயர். குடும்பினால் நியமனம் செய்யப்பட்டவர்கள் சபைக்கு உறுப்பினராகும்
தகுதியுடையவர்களின் பெயர்களை ஓலை நறுக்குகளில் எழுதி அவற்றை ஒரு
குடத்துக்குள் இடுவார்கள். பிறகு குடத்தை நன்றாகக் குலுக்குவார்கள். சபைக்கு
எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலை நறுக்குகளை
எடுக்கும்படி ஒரு சிறுவனை ஏவுவார்கள். அவன் குடத்துக்குள் கையிட்டு
வெளியில் எடுத்த ஓலைகளில் காணப்படும் பெயரினர் உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருள் ஆண்டிலும் அறிவிலும்
முதிர்ந்தவர்களான பன்னிருவர், ஏற்கெனவே தோட்ட வாரியம், ஏரி வாரியம்
ஆகியவற்றின் உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றிருந்தவர் களாயின்,
ஆட்டை (ஆண்டு) வாரியத்துக்கு உறுப்பினராக அமர்த்தப் படுவார்கள்.
ஏனையோருள் அறுவர் ஏரி வாரியத்துக்கும், பன்னிருவர் தோட்ட
வாரியத்துக்கும் நியமனம் செய்யப்படுவார்கள். பஞ்சவார வாரியம், பொன்
வாரியம், உதாசீன வாரியம் என வேறு வாரியங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
மகா சபைக்குப் பெருங்குறி என்றும், வாரிய உறுப்பினருக்கு வாரியப்
பெருமக்கள் என்றும் பெயர். சபைகளும் வாரியங்களும், பொதுவாகக்
குளத்தங்கரையிலும் மரத்தடியிலும் கூடுவது வழக்கம்.