பக்கம் எண் :

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் 311

மங்கலம் என்று அழைக்கப்பட்டன. அக் குடியிருப்புகளுக்குக் ‘கிராமங்கள்’
என்று பெயர். கிராமங்களின் ஆட்சியை நடத்தி வந்த குழுக்களுக்குச் ‘சபை’
என்று பெயர். வணிகர் நிறைந்திருந்த இடத்துக்கு ‘நகரம்’ என்ற சபை
ஊராட்சிப் பொறுப்பை மேற்கொண்டிருந்தது. ஒரே இடத்துக்கு ஒன்றுக்கு
மேற்பட்ட சபைகளும் செயல்பட்டு வந்ததாகக் கல்வெட்டுகளின் மூலம்
அறிகின்றோம். இச்சபைகள் அல்லாமல் உழவுத் தொழில் மேற்கொண்டிருந்த
வேளாண் குடிகளுடைய குழுக்கள் ‘சித்திரமேழி’ என்ற பெயரில் நடைபெற்று
வந்தன. அக் குழு உறுப்பினர்கள் சித்திரமேழிப் பெரிய நாட்டினர் என்று
அழைக்கப் பெற்றனர். இதைப்போலவே குலம், சமயம், பொருளாதாரம்
ஆகியவற்றைப் பற்றிய ஒழுகலாறுகளைப் போற்றிப் பாதுகாத்து வந்த வேறு
சில குழுக்களும் ஊராருடன் ஒன்றுபட்டுப் பணியாற்றி வந்தன. மற்றும்,
பலதேசத்து வணிகர்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட ‘நானாதேசி’ யென்னும்
‘திசையாயிரத்து ஐந்நூற்றுவர்’, ‘தச்சர், கம்மாளர் ஆகியவர்களைப் போன்ற
கைவல் கம்மியர் தமக்குள் அமைத்துக்கொண்ட ‘இரதகாரர்’ ஆகிய
நிறுவனங்கள் குலநலம், வாணிகநலம் ஆகியவற்றுக்குத் தொண்டு
புரிந்துவந்தன.

    ஊராட்சிகள், கிராம சபைகள், சித்திரமேழிகள் ஆகியவை மேற்கொண்ட
பண்டைய பழக்கவழக்கங்கள், அறவொழுக்கம் புண்ணியம் பாவம் என்ற
சமயச் சார்புள்ள நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே
தொழிற்பட்டு வந்தன; அவற்றுக்கெனத் தனிச் சட்டங்களும், விதிகளும்
வகுக்கப்படவில்லை. அச் சபைகள் செய்த விசாரணைகளும், அவை
மேற்கொண்ட முடிபுகளும் ஊர்க் குடிமக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தக்
கூடியன. அம் முடிபுகளும் காலத்தாழ்ப்பின்றி உடனுக்குடன் நிறைவேற்றி
வைக்கப்பட்டன. ஓரமும் ஒருதலையும் இச் சபையின் தீர்ப்புகளில்
காணமுடியாது.

    உத்தரமேரூர்க் கல்வெட்டுகள்21 அக் காலத்தில் வழங்கிய கிராமச்
சபைகளின் அமைப்பு முதலியவற்றைப் பற்றிய விரிவான செய்திகளைத்
தருகின்றன. உத்தரமேரூர்க் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது
‘குடும்பு’களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இக்குடும்புகள் ஒவ்வொன்றும்
சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடையவர் ஒருவரை நியமனம்
செய்யவேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு இருக்க
வேண்டிய தகுதிகளாவன ; அவர்கள் குறைந்த அளவு கால்வேலி
நிலத்துக்காவது

    21. S. I. I. VI. No. 295.