பக்கம் எண் :

310தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

கூறிற்று.13 பரிவேட்டைக்குப்போன செல்வப் பேரரையன் என்பவன்
ஒருவனைத் தேவன் என்பவன் கைப்பிழையால் அம்பெய்து கொன்றுவிட்டான்.
இவன் அறியாமல் செய்த குற்றத்துக்குக் கழுவாயாகக் கோயிலுக்கு அரை
நந்தா விளக்கு வைத்துவர வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறிற்று.14

    பிறர் நலத்துக்காகத் தன்னலந் துறந்து உயிர்விட்டவர்களின்
வழிவந்தோருக்கும் உறவினருக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.
இத்தகைய தானங்கட்கு ‘உதிரப்பட்டி’ என்று பெயர். தன்னைப் புரந்துவந்த
மற்றொருவனுக்கு உற்ற துன்பத்தைத் துடைக்கும் பொருட்டுத் தற்கொலை
செய்துகொண்டவன்,15 போரில் விழுப்புண் பெற்று வீர மரணத்தைத்
தழுவியவன்,16 கோயில் மண்டபம் ஒன்று கட்டி முடிந்ததை முன்னிட்டுத்
தன்னேயே பலியாகக் கொடுத்துக்கொண்டவன்,17 கோயில் நிருவாகியின்
தவறுகளைக் கண்டித்துத் தீப்புக்கு (தீப்பாய்ந்து) மாண்டவன்18 ஆகிய
வீரர்களின் வாரிசுதாரர்கள் உதிரப்பட்டி வழங்கப் பெற்றனர்.

    சோழர் காலத்தில் நாட்டாட்சி முறையில் கிராம நிருவாகத்துக்குச்
சிறப்பிடம் கொடுக்கப்பட்டது. கிராமத்தின் நிருவாகம் நாட்டின் அரசாட்சிக்கு
அடிப்படையாக அமைந்திருந்தது. முதலாம் பராந்தகனின் உத்தரமேரூர்க்
கல்வெட்டு ஒன்று19 இந்த ஆட்சியின் அமைப்பையும், அது செலுத்த
வேண்டிய பொறுப்புகளையும் விளக்குகின்றது. இந்த முறையானது கி.பி.
800ஆம் ஆண்டிலேயே பாண்டி நாட்டில் பிராமணருடைய கிராமங்களில்
கையாளப்பட்டு வந்ததாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் மானூரில்
கண்டெடுக்கப்பட்ட மாறஞ்சடையனின் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது.20

    உழுதுண்டு வாழ்ந்துவந்த வேளாண் மக்கள் குடிபொருந்திய இடத்துக்கு
‘ஊர்’ என்று பெயர். அவ்வூர் ஆட்சியை நடத்தி வந்த குழுவுக்கு ‘ஊர்’
என்றும், ‘ஊரவர்’ என்றும் பெயர். பிராமணரின் குடியிருப்புகள் அகரம்,
பிரமதேயம், சதுர்வேதி

    13. Ep. Rep. 104/1909.
    14. S. I. I. VI. No. 327.
       S. I. I. VII No. 68.
       S. I. I. VI. No. 85
    15. Ep. Rep. 138/12;
    17. Ep. Rep. 197/34-35.
    16. Ep. Rep 47/28, 29.
    18. S. I. I. VII. No. 759.
    19. Ep. Ind. XXII No. 24.
    20. Ep. Ind. XXII No. 3.