பக்கம் எண் :

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் 309

    மன்னனுக்கு அணுக்கத்திலேயே சில நிருவாக அலுவலர்கள் எப்போதும்
காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ‘உடன் கூட்டம்’ என்று பெயர்.

    நீதி வழங்கும் பொறுப்பானது ஊர்ச் சபையினரிடமும், குலப் பெரிய
தனக்காரரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரிக்கவும், தீர்ப்பு
வழங்கவும் விதிகளும் முறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. கரணத்தான்
துணையுடன் நீதிமன்றங்கள் செயல்படும். ஆவணச் சான்றுகளைக் கொண்டும்,
பிறர் கூறும் சான்றுகளைக் கொண்டும், தாந்தாம் நேரில் கண்டவற்றைக்
கொண்டும் நீதிமன்றத்தினர் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறினர்.
நீதிபதிகள் தம் முன்பு விசாரணையில் இருந்து வந்த வழக்குகளில் தாம்
நேரில் கண்டவற்றைக் கொண்டோ, தாம் தனிப்பட்ட முறையில்
அறிந்துகொண்டவற்றைக் கொண்டோ தீர்ப்புக் கூறுவது இக் காலத்திய
இந்தியச் சாட்சியச் சட்டத்துக்கு முரணாகும் என்பது இங்குக் கருதத்தக்கது.

    உடலைப்பற்றிய குற்றங்கள் என்றும், உடைமைகளைப் பற்றிய குற்றங்கள்
என்றும் இப்போது செய்யப்பட்டுள்ள பாகுபாடுகள் சோழர் காலத்தில்
காணப்படவில்லை. குற்றங்களைப் பெரும்பாலும் கிராம நீதிமன்றங்களே
விசாரித்துத் தீர்ப்புக் கூறின. குற்றங்கட்குத் தண்டனையாகக் குற்றவாளியின்
உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் அவை முறையாகக்
கொண்டிருந்தன. திருடு, பொய்க் கையொப்பம், விபசாரம் ஆகியவை கொடுங்
குற்றங்களாகக் கருதப்பட்டன. இக் குற்றங்களைப் புரிந்து தண்டனை
பெற்றவர்கள் ஊராட்சி அவைகளில் அமரும் தகுதியை இழந்துவிடுவார்கள்.

    தெரிந்தோ தெரியாமலோ செய்த சில குற்றங்களுக்குச் சிறைத் தண்டனை
விதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் கோயில்களுக்கோ அன்றி
மடங்களுக்கோ இவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புகள்
வழங்கப்பட்டன. சில தீர்ப்புகள் நமக்கு வியப்பை யளிக்கக் கூடியவையாகும்.
ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றுவிட்டான். அக் குற்றத்துக்காக
அவனைச் சிலர் எருமைக் கடாவின் காலில் பிணித்துவிட்டனர். கடாவினால்
அங்கும் இங்கும் இழுப்புண்டு அவன் மாண்டு போனான். அவனை அவ்வாறு
கொன்றவர்கள் தம் குற்றத்துக்குக் கழுவாயாகத் திருத்தொண்டத் தொகை
என்ற மடத்தில் சிறப்பு வழிபாடு ஒன்று நிறுவ வேண்டுமென்று நீதிமன்றம்
தீர்ப்புக்