சாலையில் வைக்கப்பட்டுள்ளதால் அவை லீடன் செப்பேடுகள் என்னும் பெயராலேயே வழங்கி வருகின்றன. ஸ்ரீ விசய நாட்டு மன்னன் சூளாமணிவர்மன் என்பவன் தமிழகத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை என்று ஓர் ஆலயத்தைப் புத்த பகவானுக்கு எடுப்பித்த செய்தியையும், அந்த மன்னனின் வேண்டு கோளுக்கிணங்கிச் சோழ மன்னன் அக் கோயிலுக்கு ஆனை மங்கலம் என்ற சிற்றூர் ஒன்றைத் தானமாகக் கொடுத்த செய்தியையும் லீடன் பட்டயங்கள் தெரிவிக்கின்றன. சோழ மன்னன் வாய்மொழியாகப் பிறப்பித்த ஆணையைக் கோட்டத்து அவையினரான நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், தேவதானத்து ஊர்களிலார், பள்ளிச் சந்தங்கள், கணமுற்றூட்டு, வெட்டிப்பேறு, நகரர்கள் ஆகியவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள்கள். நாட்டாரின் சபையான நாடும், பிரமதேயத்தின் சபையும், ஊர்ச்சபையான ஊராரும் அரசாணையின்மேல் பிறப்பித்த கட்டளைகளை மத்தியஸ்தனும், கரணத்தானும் ஆவணத்தில் எழுதி வைப்பார்கள். சபையின் தலைவனுக்குத் திருவடிகள் என்று பெயர். சபையின் கூட்டங்கட்கு உறுப்பினர் அனைவரும் வந்து நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு ஒன்று உண்டு. அப்படி வராதவருக்குத் தண்டப்பொன் விதிக்கப்பட்டது.12 தானம் செய்யப்பட்ட ஊரின் எல்லைகளையும், தானத்தின் நிபந்தனைகளையும் அறுதியிடுவதற்காக அரசாங்க அலுவலர்கள் நாலவர் அமர்த்தப்பட்டனர். ஊரார் தீட்டிய ஆவண ஓலையில் கையொப்பமிடவேண்டிய பொறுப்பு மத்தியஸ்தனைச் சார்ந்தது. இம் மத்தியஸ்தனுக்குக் கரணத்தான் என்றும், வேட்கோவன் என்றும் வேறு பெயர்கள் உண்டு. அரசன் தன் அமைச்சரையும், ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட தலைமைச் செயலாளரையும் கலந்துகொண்டுதான் தன் ஆணையைப் பிறப்பிப்பான். உயர்தரச் செயலாளருக்குப் பெருந்தனம் என்றும், கீழ்ப் பிரிவுச் செயலாளருக்குச் சிறுதனம் என்றும் பெயர். கிராமங்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புகளாகவே விளங்கின. பல கிராமங்கள் சேர்ந்தது கூற்றம். கூற்றத்துக்குக் கோட்டம் என்றும், நாடு என்றும் பெயருண்டு. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. பல வள நாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம் ஆகும். 12. S. I. I. V. 588. |