பக்கம் எண் :

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் 307

திரட்டப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது. இப் படை வைணவ ஈடுபாடு
உடையதாக இருந்தது. கன்னரதேவனை அது தோற்றோடச் செய்ததாம்.
மேலும், அது கடல் கடந்து சென்று ஈழ நாட்டு மாதோட்டத்தை அழித்துப்
பல வீரச் செயல்கள் புரிந்து சோழ மன்னனுக்கு மாபெரும் வெற்றிகளை
ஈட்டித் தந்தது.

    சோழநாடு முழுவதிலும் ஆங்காங்குப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
படைகள் தங்கியிருந்த தண்டுகளுக்குக் ‘கடகங்கள்’ என்று பெயர். எந்தெந்த
ஊர்களில் படைகள் தங்கியிருந்தனவோ அந்த ஊர்களில் இருந்த
கோயில்களின் பாதுகாப்பும் கோபுரங்களின் பாதுகாப்பும் அப் படைகளின்
கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.10 படைகள் திரட்டப்பட்ட விதமும்,
அவற்றுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட முறையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

    சோழ மன்னர் போர்ப்படைகளில் அறுபதினாயிரம் யானைகளும்
பல்லாயிரக் கணக்கான குதிரைகளும் இருந்தன. தமிழ் மக்கள்
இந்தோனேசியா, மலேசியா ஆகிய கிழக்கிந்திய நாடுகளிலும், இலங்கையிலும்
பெருந்தொகையினர் குடியேறியிருந்தனர். பல்லவர்கள் காலத்திலிருந்தே
கடலுக்கப்பால் உற்ற நாடுகளுடன் தொடர்பு வளர்ந்து வந்தது. ஆகவே,
சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூவரிடமும் சிறந்த கப்பல் படைகள்
இருந்து வந்தன. ஆனால், கப்பல்களின் அளவும், அவை கட்டப்பட்ட
முறைகளும் இன்னவென அறிவிக்கக் கூடிய நூல்களோ, ஆவணங்களோ
ஒன்றேனும் இன்று கிடைத்திலது.

    நாட்டு ஆட்சிக்குத் தலைவன் மன்னன். அவன் சிற்சில இடங்களில்
அமர்ந்து குடிமக்களின் விண்ணப்பங்களை ஏற்று ஆணைகளைப்
பிறப்பிப்பான். அரசன் மொழியும் ஆணைகள் வாய்மொழியாகவே இருக்கும்.
அவற்றுக்குத் திருவாய்க் கேள்விகள் என்று பெயர். இவ் வாணைகளைக்
கேட்டு உரியவர்களுக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கும்
பொறுப்புடையவனுக்கும் திருவாய்க்கேள்வி என்றே பெயர். வேந்தன் ஆணை
பிறக்கும் முறையும், அது நிறைவேற்றப்பட்ட முறையும் முதலாம்
இராசராசனின் செப்பேடுகளில் விளக்கப்பட்டுள்ளன.11 இச்செப்பேடுகள்
இப்போது ஐரோப்பாவில் லீடன் என்னும் ஊர்ப் பொருட்காட்சி

    10. Ep. Rep. 189/1895.
       Ep. Rep. 167/1909.
       Ep. Rep. 188/1925.
    11. Ep. Ind. XXII. No. 34 p. 213.