சோழ வேந்தரின் சிலைகள் சில கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு முறையான வழிபாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இரண்டாம் சுந்தர சோழன் பராந்தகனின் மகளான குந்தவை பிராட்டியார் தன் தாய்க்கும், தந்தைக்கும் சிலைகள் வைத்து விழபாடு நிறுவினாள்.7 படைகள் எல்லாப் படைகளுக்கும் தலைவனாக மன்னன் செயல்பட்டு வந்தான். சோழரிடம் ஆற்றல்மிக்க தரைப் படையும், கப்பற் படையும் இருந்தன. இப் படைகளின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர்களும் வழங்கி வந்தன. யானைப் படைகளும் குதிரைப் படைகளும், சோழரின் அணிவகுப்புகளில் சிறப்பிடம் பெற்றன. காலாட் படையில் சிறப்பிடம் பெற்றது கைக்கோளப் பெரும்படை என்பது.8 கைக்கோளர் என்ற பெயர் வெற்றியைக் கைக்கொள்ளும் சிறந்த வீரர் என்ற பொருளில் வழங்கி வந்தது. அது மட்டுமன்றி அச் சொல் ஒரு குலத்தைக் குறிப்பிடுவதாகவும் கல்வெட்டு களிலிருந்து அறிகின்றோம். கைக்கோளப்படை அல்லாமல் வில்லிகளையும், வாள் வீரர்களையும் கொண்ட படைகள் வேறு நிறுவப் பெற்றிருந்தன. வலங்கை இடங்கை என்னும் பாகுபாடுகளைத் தமிழகத்து வரலாற்றில் முதன்முதல் சோழரின் ஆட்சியில்தான் காண்கின்றோம். வலங்கை வேளைக்காரர்படை என அணி ஒன்று சிறப்புற்றுக் காணப்பட்டது. இடங்கைப் படை என்று ஒரு பிரிவு இலங்கையில் வகுக்கப்பட்டிருந்ததாகப் பொலன்னருவையில் காணப்பெறும் விசயபாகு என்ற மன்னனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1065-1120) தெரிவிக்கின்றது. வேளைக்காரர்கள் என்பவர்கள் அரசனுக்கு அணுக்கத்திலேயே நின்று அவனுக்குத் தொண்டு செய்தவர்கள் ஆவார்கள். மன்னனுக்கு விளையக்கூடிய எந்த வகையான இன்னல்களையும், ஊறுகளையும் வேளைக்காரர்கள் தாமே ஏற்றுக் கொள்ளுவார்கள். தமக்கு எந்தவிதமான ஊறுபாடும் ஏற்படாதவாறு காக்கின்ற கடவுள் முருகன் என்னும் பொருள்படத் தம் திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் முருகக் கடவுளை அருணகிரிநாத சுவாமிகள் ‘வேளைக்காரப் பெருமாளே’ என்று பாராட்டுகின்றார். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியவர்கள் காலத்தில் மூன்று கை மகாசேனை என்று ஒரு படையும் 7. S. I.I. II. No. 73, 76. 8. S. I. I. VII. No. 112. |