பக்கம் எண் :

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் 305

கொண்டான் தெரிந்த திருமஞ்சனட்டார் வேளம், இராசராச தெரிந்த
பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம் என்பனவாம்.5 குறிப்பிட்ட ஒரு பணியில்
ஈடுபட்டிருந்த தொழிலாளருக்கெனத் தனி வேளம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூரில் இவ் வேளங்கள் யாவும் நகரின் எல்லைக்கு அப்பால் ‘புறம்பாடி’
யில் அமைக்கப்பட்டிருந்தன. கங்கைகொண்ட சோழபுரத்திலும் வேளங்கள்
உண்டு. போரில் சிறைபிடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும்
வேளத்தில் அமர்த்தப்பட்டனர். வேளத்தைச் சேர்ந்தவர்களின் தொழில்
இழிவானதாகக் கருதப்படவில்லை.

    சோழ மன்னர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். குரு ஒருவரிடம்
தீட்சை பெறவேண்டும் என்பது சைவ சமயக் கோட்பாடுகளுள் தலையாய
தொன்றாகும். ஆகவே, அரசவையில் மன்னரின் குருக்கள் சிறப்பிடம் பெற்று
அமர்ந்திருப்பது வழக்கமாக இருந்தது. முதலாம் இராசராசன்
கல்வெட்டுகளிலும், முதலாம் இராசேந்திரன் கல்வெட்டுகளிலும் ஈசான
பண்டிதர், சர்வசிவ பண்டிதர், பவன பிடாரன் என்ற குருமாரின் பெயர்கள்
குறிப்பிடப்படுகின்றன.6 முதலாம் குலோத்துங்கன் தன்னுடைய குலகுருவைக்
கலந்துகொண்டு, அவருடைய உடன்பாட்டின்மேல் நூற்றெட்டுச் சதுர்வேதிப்
பட்டர்களுக்குப் பிரமதேயம் ஒன்றைத் தானமாக வழங்கினான். சமயச்
சார்பான நிறுவனங்களின் நிருவாகத்தை மூன்றாம் குலோத்துங்கன் தன்
‘சுவாமி தேவர்’ (குரு) வசமே ஒப்படைத்திருந்தான்.

    சோழவேந்தர்கள் எழுப்பிய கோயில்களுக்குப் பெரும்பாலும் அம்
மன்னனின் பெயரையோ, விருதுப் பெயர்களில் ஏதேனும் ஒன்றையோ
சூட்டுவது வழக்கமாய் இருந்தது. இராசராசன் கட்டிய கோயிலுக்கு
இராசராசேசுவரம் என்றும், கங்கை கொண்ட சோழனான இராசேந்திரன்
எழுப்பிய கோயிலுக்குக் கங்கைகொண்ட சோழீசுரம் என்றும் பெயர்கள்
வழங்கிவருவது இவ் வழக்கத்துக்குச் சான்றாகும். உயிரிழந்த மன்னருக்கு
நினைவுச் சின்னங்களாகவும் சில கோயில்கள் எழுப்பப்பட்டன. முதலாம்
பராந்தகன் தொண்டைமானாட்டில் ஆதித்தியேசுரம் என்ற கோயிலைத் தன்
தந்தையின் பள்ளிப்படையாக எழுப்பினான். முதலாம் இராசராசன் ஆற்றூரில்
துஞ்சிய அரிஞ்சயனுக்கு மேல்பாடியில் அரிஞ்சிகையீசுரம் என்ற கோயிலை
எழுப்பினான். இத்தகைய கோயில்கள் மேலும் பல உள.

    5. S. I. I. II 53. 94
    6. S. I. I. II No. 90