பக்கம் எண் :

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் 369

என்பர். எனினும், புகழேந்திப் புலவர் வெண்பாவைக் கொண்டே நளன்
கதையை வெகு அழகாகப் பாடியுள்ளார். கருத்து வளத்திலும்,
சொல்லோட்டத்திலும், வெண்சீர்களின் அமைப்பிலும் புகழேந்தியின்
நளவெண்பாவானது ஏனைய காவியங்களினின்றும் தனித்து நி்ற்கின்றது.
கடற்கரையில் மக்களின் நடையொலியைக் கேட்டு அஞ்சியோடி மணலுக்குள்
புகுந்து ஒளியும் நண்டுகளைக் கண்டு ஏக்கமுடன் கேள்விகள் கேட்கும்
நளனுடைய உள்ளத்தின் துன்பம் தோய்ந்த நிலை, இந்நூலைப் படித்தவர்கள்
நெஞ்சில் என்றுமே பதிந்து நிற்கும். பதினேழு, பதினெட்டாம்
நூற்றாண்டுகளில் பாடப்பட்ட அல்லியரசாணி மாலை, புலந்திரன் களவு
மாலை, பவளக்கொடி மாலை, ஏணி ஏற்றம், தேசிங்குராசன் கதை
ஆகியவற்றையும் புகழேந்திப் புலவரின் படைப்புகள் எனக் கொள்ளும்
தவறான எண்ணம் எப்படியோ ஏற்பட்டுள்ளது.

கோவைகள்

     குலோத்துங்கன் கோவை, தஞ்சைவாணன் கோவை என்னும் இரு
நூல்களும் சோழர் காலத்தில் இயற்றப்பட்டவையாம். முன்னதன் ஆசிரியர்
இன்னாரெனத் தெரியவில்லை. தஞ்சைவாணன் கோவையைப் பாடியவர்
பொய்யாமொழிப் புலவராவார். திருச்சிற்றம்பலக் கோவையை யடுத்துச்
சிறப்புடன் பயிலப்படுவது இக் கோவையே யாகும்.

சமண காவியங்கள்

     சோழருடைய ஆட்சிக் காலத்தில் சமணரால் இயற்றப்பட்ட
காவியங்களும், தோத்திரப் பாடல்களும், இலக்கண நூல்களும் பல தோன்றின.
காவியங்களுள் மிகப்பெரிய காவியங்களாகச் சீவகசிந்தாமணியையும்
பெருங்கதையையும் குறிப்பிடலாம். சீவக சிந்தாமணி திருத்தக்கதேவரால்
இயற்றப்பட்டது. இவர் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்
எனக் கருதுகின்றனர். இவர் சோழர் குலத்தில் பிறந்தவர் என்றும், வஞ்சி
யென்னும் ஊரிலிருந்து பொய்யாமொழி என்பவரால் புகழப் பெற்றவர் என்றும்
நச்சினார்க்கினியரின் உரையினின்றும் தெரிந்துகொள்ளுகின்றோம். இவர்
தமிழிலும் வடமொழியிலும் புலமை சான்றவர்; சமண சமய நூல்களை
ஐயந்திரிபறப் பயின்றவர்; சமண சமயத்தைத் தழுவி இளமையிலேயே துறவு
பூண்டவர். திருத்தக்கதேவர் இந்நூலில் பலவகையான இலக்கியச் சுவைகளை
அமைத்துப் பாடியுள்ளார். இந்நூற் பாடல்கள் விருத்தப்பாவால்
ஆக்கப்பட்டுள்ளன ; பல நயங்களையும்