பக்கம் எண் :

370தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

பொருள் நுணுக்கங்களையும் கொண்டு மிளிர்கின்றன. இந் நூல் கூறும்
கதையானது வடநாட்டுச் சார்பு உடையது எனினும் தமிழகத்துச் சமூகத்தைப்
பின்னணியாக வைத்துப் பாடப்பட்டுள்ளது. எனவே, திருத்தக்கதேவர்
காலத்தைப்பற்றிய செய்திகளை இந்நூலினின்றும் அறிந்துகொள்ளலாம். சோழர்
காலத்திய நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைப் பற்றிய
குறிப்புகளைக் கொண்டுள்ள ஒரு கலைக்களஞ்சியமாக விளங்குகின்றது இந்
நூல். சீவக சிந்தாமணிக்கு மணநூல் என்றும் ஒரு பெயருண்டு. சீவகன் என்ற
மன்னன் மகளிர் எண்மரைத் தனித்தனித் திருமணம் செய்துகொண்டதும், ஒரு
பெண்ணைத் தன் தோழனுக்குத் திருமணம் செய்துவைத்ததுமான செய்திகளை
இந் நூல் கூறுகின்றது. இந் நூலைச் சமணர்கள் பூசித்துப் பாராயணம்
செய்வர். இந் நூலுக்கு நச்சினார்க்கினியர் சிறந்ததொரு விரிவுரை தந்துள்ளார்.
சீவகசிந்தாமணியில் வரும் கருத்துகளும், கதைகளும் பல தமிழ் நூல்களிலும்
உரைகளிலும் ஆளப்பட்டுள்ளன. கம்பரைப் போலவே இந் நூலாசிரியரும்
தமிழைப் பாராட்டியுள்ளார். அழகிய பெண்களைத் ‘தமிழ் தழீஇய சாயலர்’192
என்று திருத்தக்கதேவர் புகழ்கின்றார். கம்பர் ‘வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும்
தாமரையே’193 என்றும், அதிவீரராம பாண்டியன் ‘தமிழினும் இனிய
மென்மையவாகி’194 என்றும் பாடியது திருத்தக்கதேவரின் பாராட்டை
நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

     தமிழ்மொழிக்கு வளமூட்டிய மற்றொரு சமண காவியம் பெருங்கதை
என்பது ; கொங்குவேளிர் என்ற புலவரால் பாடப்பட்டது. குணாட்டியர்
என்பார் பைசாச மொழியில் இயற்றிய உதயணன் கதையை இந் நூல் தமிழில்
கூறுகின்றது. இதில் இடையிடையே சமண தத்துவங்கள் விளக்கப்படுகின்றன.
இந் நூலின் முதற் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைத்தில. இது நிலைமண்டில
ஆசிரியப் பாக்களினால் ஆக்கப்பட்டுள்ளது.

     இந் நூலின் ஆசிரியரான கொங்குவேளிர் என்பவர் கொங்கு நாட்டு
வேளாள வகுப்பைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த ஊர் கொங்கு நாட்டில் உள்ள
விசயமங்கையாகும். இவர் வாழ்ந்த காலம் இன்னும் தெளிவாகவில்லை.
அடியார்க்குநல்லார் தம் சிலப்பதிகார உரையில் இந் நூலைச் சிந்தாமணி
என்னும் பெயருக்கு முன்பு வைத்துக் குறிப்பிடுவதால் இந் நூலாசிரியரான

     192. சீவக. 2026
     193. கம்ப. ரா. பம்பை. 28.
     194. கூர்ம. பு. வான. 22.