கொங்குவேளிர் திருத்தக்கதேவருக்கும் முற்பட்டவரோ என்று எண்ண வேண்டியுள்ளது. பெருங்கதையும் சீவகசிந்தாமணியைப் போலவே ஒரு கலைக் களஞ்சியமாக விளங்குகின்றது. கொங்குவேளிர் வாழ்ந்திருந்த காலத்து வழங்கிய பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை இந்நூலின் வாயிலாக அறிந்துகொள்ளக்கூடும். இன்றைய நாளில் நடைபெறுவதைப் போலவே அந் நாளிலும் சிறு பிள்ளைகள் தெருவில் பெண்கள் போடும் கோலங்களைச் சிதைப்பது வழக்கம். காலை வேளையில் வாரிவிடாத தலைமயிரை விரித்துக்கொண்டு விளையாடும் அச் சிறுவரை ‘முனித்தலைச் சிறார்’195 (முனிவருடைய பரட்டிய தலைபோன்ற சிறுவர்கள்) என்று கூறுவது இந் நூலைப் பயில்வோர் முகத்தில் புன்முறுவலைத் தோற்றுவிக்காமல் இராது. வளையாபதி, நீலகேசி என்னும் சமண காவியங்களும், குண்டலகேசி என்னும் பௌத்த காவியமும் சோழருடய காலத்தில் இயற்றப்பட்டவையே. திருவாகரம், பிங்கலத்தை என்னும் இரு நிகண்டுகளும் இக் காலத்தவையேயாம். நன்னூல், நேமிநாதம், யாப்பருங்கலம், புறப்பொருள் வெண்பாமாலை, வெண்பாப் பாட்டியல், வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றிச் சோழரின் ஆட்சியை அணிசெய்தன. பெரிய புராணம் பெரிய புராணத்தைப் பாடியவர் சேக்கிழார் ஆவார். இவர் சென்னைக்கு அண்மையில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். அநபாயன் என்ற சோழ மன்னனுக்கு அமைச்சராகப் பணியாற்றினார். இவருடைய தமிழ்ப் புலமையையும், நுண்ணறிவையும் பாராட்டிய மன்னன் இவருக்கு ‘உத்தமசோழப் பல்லவன்’ என்றொரு விருதைச் சூட்டினான். சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரையும், தொகையடியார்களையும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகையில் வைத்துப் பாடினார். அவருடைய திருப்பாட்டை விரித்து நம்பியாண்டார் நம்பிகள் கலித்துறை அந்தாதி ஒன்றைப் பாடினார். அநபாய சோழனானவன் சமண காவியமான சீவகசிந்தாமணியைப் பயின்று, அதன்கண் கூறப்பெறும் சமண தத்துவத்தை மெய்யென்று பலபடப் பாராட்டிக் கொண்டிருந்தான். சேக்கிழார் 195. பெருங். 2 : 2 : 106-7 |