பக்கம் எண் :

372தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

அவனுக்குச் சைவத்தின் பெருமையை உணர்த்தவும், சிவத் தொண்டர்களின்
பெருமையை உலகெலாம் கேட்டு வியக்கவும் திருத்தொண்டர் புராணம்
என்னும் பெரிய புராணத்தைப் பாடினார். இவர் சோழநாட்டு அமைச்சராக
இருந்தமையால் நாடுமுழுதும் சென்று நாயன்மார்களின் வாழ்க்கை
வரலாறுகளைப் பற்றிய பல உண்மைகளைத் துருவியாராய்ந்து பல
செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். பெரிய
புராணத்தைப் பாடுவதற்குச் சிதம்பரத்தில் கோயில்கொண்டுள்ள
அம்பலத்தாடுவானே ‘உலகெலாம்’ என்று முதல் அடி எடுத்துக்
கொடுத்தானாம். சேக்கிழார் இந் நூலை 4,286 செய்யுள்களில் ஓராண்டுக்கால
அளவில் முடித்துச் சிதம்பரம் கோயிலில் ஆயிரக்கால் மண்டபத்தில் இதை
அரங்கேற்றினார் என்று சேக்கிழார் புராணம் கூறுகின்றது. அநபாயசோழன்
சேக்கிழாரைப் பசும்பட்டினால் போர்த்தி அவரையும், பொற்கலத்தில்
இட்டுவித்த பெரிய புராணத்தையும் யானைமேல் ஏற்றித் தானுங் கூட
இவர்ந்திருந்து, புலவர் பெருமானுக்குத் தன் இருகையாலும் கவரி வீசித்
திருவீதிக் கோலங்கண்டான். இக் காட்சியைக் கண்டு களித்த மக்கள், ‘மதுர
இராமாயணக் கதை உரைசெய்த வான்மீக பகவானும் ஒப்பல்ல, விதிவழி
பாரதம் உரைசெய்து கரைசெய்த வேதவியாசனும் ஒப்பல்ல...’ என்று
சேக்கிழாரைப் புகழ்ந்து பரவினார்கள்.

     சேக்கிழாரைத் தன் அமைச்சராகக் கொள்ளும் பெரும் பேறு வாய்க்கப்
பெற்ற அநபாயசோழன் என்பான், இரண்டாம் இராசராசசோழனே என்பர்
ஆய்வாளருள் சிலர். இவரை இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியின்
பிற்பகுதியிலும் இரண்டாம் இராசராசன் ஆட்சியின் முற்பகுதியிலும்
வாழ்ந்தவராகக் கொள்ளுவது பொருத்தமானதாகத் தெரிகின்றது.

     பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் திருவிளையாடற் புராணம் ஒன்றை
இயற்றினார். அவர் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
வாழ்ந்திருந்தவர் என ஆய்வாளர் கருதுகின்றனர். சிவபெருமான் மதுரையில்
மேற்கொண்ட அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறுவது
இந் நூல்.

     சைவத் திருமுறைகளின் தொகுப்பில் ஒன்பதாம் திருமுறையில்
சேர்க்கப்பட்டுள்ள பாடல்களில் சிலவற்றைப் பாடியவர்கள் கண்டராதித்தர்,
கருவூர்த்தேவர் என்போர் ஆவர். கண்டராதித்தர், முதலாம் பராந்தக
சோழனின் மகன். கருவூர்த்