தேவர் முதலாம் பராந்தகனின் நண்பர். பெருவுடையார் கோயில் இலிங்கம் நன்கு பதிவுறவில்லை யென்றும், கருவூர்த் தேவர் தம் ஆன்மீக ஆற்றலைக்கொண்டு அதைப் பதிப்பித்தனர் என்றும் கூறுவர். இவர் மாபெரும் சித்தர்களில் ஒருவராக வைத்து எண்ணப்படுகின்றார். இவருடைய பெயரில் மருத்துவம், இரசவாதம், பூசை விதிகள் ஆகிய நூல்கள் பல வழங்கி வருகின்றன. மெய்கண்டார் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை முறைப்படுத்திச் சிவஞான போதம் என்னும் ஒரு நூலை இயற்றியவர், வேளாளர் குலத்தைச் சார்ந்த மெய்கண்டார் ஆவார். இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் ; குழந்தைப் பருவத்திலேயே மெய்யுணர்வு பெற்றவர் என வரலாறுகள் கூறுகின்றன. வடமொழியில் உள்ள இரௌரவ ஆகமத்தின் மொழிபெயர்ப்பு இந் நூல் எனச் சிலர் கூறுவர். வடமொழி ஆகமத்தையும், சிவஞான போதத்தையும் ஒப்புநோக்கி ஆய்பவர்கட்கு இவ் விரண்டினிடையே பல வேறுபாடுகள் புலப்படும். சிவஞான போதம் பன்னிரண்டு சூத்திரங்களால் ஆனது. அது பதி, பசு, பாசம் என்னும் சைவ சித்தாந்த முப்பொருளின் உண்மை கூறி, அவற்றுள் காணப்படும் தொடர்பை விளக்கி இறுதியில் உயிரானது பெறவேண்டிய வீடுபேற்றையும் விளக்கிக் காட்டுகின்றது. இப் பன்னிரு சூத்திரங்களுக்கு உதாரண வெண்பாக்களையும் மெய்கண்டாரே இயற்றியுள்ளார். சிவஞான போதம் எழுதுவதற்கு முன்பு வாகீச முனிவர் ஞானாமிர்தம் என்னும் சைவ சித்தாந்த விளக்கம் ஒன்றைப் பாடினார். அது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களால் ஆனது. இப்போது ஞானபாதம் மட்டுந்தான் கிடைத்துள்ளது. ஏனைய மூன்றும் மறைந்துபோய் விட்டன. ஞானாமிர்தம் ஆசிரியப் பாக்களால் ஆக்கப்பட்டது ; எளிதில் பொருள் காண வியலாதது. வாகீச முனிவர் திருவொற்றியூரில் வாழ்ந்திருந்தவர். திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய ‘திருவுந்தியார்’ என்னும் நூலும், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருக்களிற்றுப்பாடியார் என்னும் நூலும் சைவ சித்தாந்தத் தத்துவங்களை விளக்கும் பதினான்கு சிறந்த நூல்களுள் வைத்துப் போற்றப்படுகின்றன. |