பக்கம் எண் :

374தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     மெய்கண்டாரிடம் மெய்ப்பொருள் ஞானத்தைப் பெற்றவர் அருணந்தி
சிவாசாரியார் என்பவர். அவர் அந்தணர் ; வேளாளர் ஒருவரைக் குருவாகக்
கொண்ட தனிச் சிறப்பைப் பெற்றவர். செய்யுள்களினால் ஒரு விரிவுரை
இயற்றினார். அதற்குச் சிவஞான சித்தியார் என்று பெயர். அது சுபக்கம்
என்றும், பரபக்கம் என்றும் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. நூல் மொத்தம்
629 செய்யுள்களால் ஆனது. அருணந்தி சிவாசாரியார் இருபா இருபஃது
என்று மற்றொரு நூலையும் இயற்றியுள்ளார். திருவதிகையில் வாழ்ந்தவரான
மனவாசகங் கடந்தார் ‘உண்மை விளக்கம்’ பாடினார். பதின்மூன்றாம்
நூற்றாண்டில் சிதம்பரத்தின் கிழக்கெல்லையில் உள்ள கொற்றவன்குடி
என்னும் ஊரில் வாழ்ந்தவரான உமாபதி சிவாசாரியார் என்பவர் தில்லை
மூவாயிரவரில் ஒருவர். அவர் எட்டுச் சித்தாந்த நூல்களை இயற்றினார்.
அவர் சைவ சித்தாந்த உண்மைகளை யுணர்ந்து அவற்றில் தோய்ந்திருந்தார்.
ஆதலின், தில்லைத் தீட்சிதர்கள் அவரைக் குலத்தினின்றும் விலக்கி ஒதுக்கி
வைத்தனர் எனக் கூறுவர். சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா,
போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம்,
சங்கற்ப நிராகரணம் என்பவை இவர் அளித்துள்ள சித்தாந்த
இலக்கியங்களாம். இந் நூல்களல்லாமல் அவர் திருத்தொண்டர் புராணம்
ஒன்றையும், திருத்தொண்டர் புராண சாரம், திருமுறைகண்ட புராணம்,
சேக்கிழார் புராணம் ஆகியவற்றையும் பாடியுள்ளார்.

வைணவ இலக்கியம்

     சோழர் காலத்தில் வைணவச் சார்புள்ள நூல்கள் அதிகமாகத்
தோன்றவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் நாதமுனிகளால்
தொகுக்கப்பட்டனவாயினும், அவற்றின் அடிப்படையில் வைணவத் தத்துவ
நூல்கள் தமிழில் தோன்றவில்லை. யமுனாசாரியார், யாதவப் பிரகாசர்,
இராமநுசாசாரியார் ஆகியவர்கள் வடமொழியில் வைணவ இலக்கியத்தை
வளர்த்தார்கள். பொதுமக்கள் கேட்டுக்கேட்டு உளமுருகி நின்ற
ஆழ்வார்களின் இனிய பாசுரங்களுக்குத் தமிழும் வடமொழியும் கலந்த
மணிப்பிரவாள நடையில் விளக்கங்கள் எழுந்தன. எளிய மக்கள் எளிதில்
அறிந்துகொள்ள வியலாத, ஆடம்பரமான, வலிந்து பொருள் காணக்கூடிய
மணிப்பிரவாள நடையில் தோன்றிய இலக்கிய உரைகள் ஒருசில மக்களுக்கே
பயன்பட்டன. பெரியவாச்சான்பிள்ளை, நம்பிள்ளை ஆகியவர்கள்