விளக்கங்கள் தந்துள்ளனர். அவற்றுக்கு ஈடுகள் என்று பெயர். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குக் குருகைப்பிரான் பிள்ளான் என்பார் எழுதிய ஆறாயிரப்படி என்னும் ஈடும், கோனேரிதாசியை என்பார் எழுதிய விளக்கமும் சிறப்பு மிக்கவை. திருவரங்கத்தமுதனார் என்பவர் தம் குரு இராமாநுசாசாரியார் மேல் இராமாநுச நூற்றந்தாதி என்னும் புகழ்மாலை ஒன்றைப் பாடியுள்ளார். தென்மொழியிலும் வடமொழியிலும் கடலனைய புலமையும், பல கலைகளில் வல்லமையும் வாய்ந்தவரான வேதாந்த தேசிகர் கி.பி. 1268-ல் பிறந்து நூறாண்டுகளுக்கு மேல் இவ்வுலகில் வாழ்ந்திருந்து கி.பி. 1369-ல் திருநாடு அலங்கரிக்கச் சென்றார். அவர் தமிழில் 24 பிரபந்தங்களையும் வடமொழியில் 84 பிரபந்தங்களையும் இயற்றினார். ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் வடமொழி வேதத்துக்கு ஒப்பாகும் என்ற உண்மையை அவர் வலியுறுத்தி வந்தார். பிரபத்தி அல்லது அடைக்கலம் என்ற தத்துவத்தை அவர் நிலைநாட்டினார். வேதாந்த தேசிகர் வளர்த்த வைணவ மரபுக்கு வடகலை என்று பெயர். குரங்குக் குட்டியானது தானே தன் தாயை விடாமற் பற்றிக்கொண்டிருப்பதைப் போல நாமே இறைவனைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்பது அவருடைய சித்தாந்தம். அதற்கு மர்க்கட (குரங்கு) நியாயம் என்று பெயர். பூனையானது தன் குட்டிகளைத் தானே தூக்கிச்சென்று பல இடங்களிலும் வைத்துப் பாதுகாப்பதைப் போல ஆண்டவனே வந்து நம்மைக் காப்பாற்றிப் பரமபதத்தையும் சாதிப்பான் என்பது தென்கலை வைணவரின் தேற்றம். அது மார்ச்சால (பூனை) நியாயம் என வழங்கும். தேசிகரின் பாசுரங்களில் இதயத்தை ஈர்க்கும் இசையைக் காணலாம் ; நெஞ்சை யள்ளும் பல்வண்ணச் சொல்லழகைக் காணலாம் ; சொல்லுக்குச் சொல் தொடர்ந்து வீசும் இறைவனின் திருவருள் மணத்தைக் காணலாம். வேதாந்த தேசிகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்திருந்தவர் ஆதலின், அந் நகரமே வடகலையாரின் தலைநகரமாயிற்று. தென்கலை மரபு வளரும் சிறப்பைத் திருவரங்கம் அடைந்து நின்றது. வேதாந்த தேசிகரின் கருத்துகள் சில இராமாநுசாசாரியாரின் கருத்துகளுடன் முரண்படுகின்றன. பகவானிடம் ஈடுபாடு கொண்டவர்களுக்குக் குல வேறுபாடுகள் கிடையா என்பது இராமாநுசரின் கொள்கை. ஆனால், ஒவ்வோர் உயிரும் இறுதியில் பிராமணப் பிறப்பை எடுத்த பிறகுதான் பரமபதம் எய்தும் என்பது தேசிகரின் கொள்கையாகும். எனினும், தேசிகர் பெரியவாச்சான்பிள்ளை என்பவரால் தெளிவுறுத்தப் பெற்றார் |