என்றும், அதன் பிறகு தாழ்ந்த குலத்தவரான திருப்பாணாழ்வார் மேல் பிரபந்தம் ஒன்று பாடினார் என்றும் வைணவ வரலாறு ஒன்று கூறுகின்றது. வடகலை-தென்கலைப் பூசல்களினால் எழுந்த கற்பனைக் கதைகளில் இஃதும் ஒன்றுபோலும். உரையாசிரியர்கள் தொல்காப்பியத்துக்கு உரைகண்ட இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியவர்கள் சோழர் காலத்து விளங்கியவர்களாவர். பேராசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையாருக்கும் உரை இயற்றியுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்துக்கு இணையற்ற உரையொன்றை எழுதித் தந்துள்ளார். மறைந்தொழிந்த பல தமிழ் நூல்கள், இசைத் தமிழ் நாடகத் தமிழைப் பற்றியவை இவர் உரையில் குறிப்பிடப்படுகின்றன. திருக்குறளுக்கு உரை வகுத்த பலருள் தலையாயவர் என்று கொள்ளப்படும் பரிமேலழகர் இக் காலத்தைச் சேர்ந்தவரேயாவார். இவர் பரிபாடலுக்கும் உரை ஒன்று கண்டுள்ளார். சோழர்களுடைய காலம் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு பொற்காலமாக எண்ணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. குடியுயர்விலும், இறைப்பணியிலும் கண்ணுங்கருத்துமாக இருந்து சோழ மன்னர்கள் ஆக்க வேலைகள் பல ஆற்றியுள்ளனர். மொழி வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் என்றுமே இல்லாத பல படிகள் ஏற்றமுற்றிருந்தன. தமிழுக்குப் பொன்றாப் புகழையும், பொலிவையும் தேடித் தந்த மாபெரும் இலக்கியப் படைப்புகள் சோழர் காலத்தில் தோன்றியுள்ளன. |