பக்கம் எண் :

377

                        15. பாண்டியரின்
                       ஏற்றமும் வீழ்ச்சியும்

     வேள்விக்குடிச் செப்பேடுகளையும், சீவரமங்கலத்துச் செப்பேடுகளையும்
வழங்கிய பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் பேராற்றல் வாய்ந்தவன்;
பாண்டிய நாட்டுக்கு ஏற்றம் கண்டவன்; பல மன்னர்களையும் போரில்
புறங்கண்டு தன் படைபலத்தின் சிறப்பை நாடறிய விட்டவன். குறுநில
மன்னரை ஒடுக்குவதற்காகவே ‘களக்குடி நாட்டுக் களக்குடியான கரவந்தபுரம்’
என்ற இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டி, அதில் தண்டு நிறுத்தியிருந்தான்.1

     பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் தன் முன்னோர் சென்ற
வழியினின்றும் சில வகைகளில் விலகிச் சென்றான். அவர்கள் அனைவரும்
சைவம் வளர்த்தவர்கள்; பராந்தகன் வைணச் சார்புடையவன். அவன்
காலத்தில் பாண்டி நாட்டில் பெரியாழ்வாரும், ஆண்டாள் நாச்சியாரும்
வாழ்ந்து வந்தனர். அவர்களிடத்தில் பராந்தகனுக்குப் பற்றுதல் ஏற்பட்டது
போலும். வேள்விக்குடிச் செப்பேடுகளின் இறுதியில் வைணவ சமய
சுலோகங்கள் காணப்படுகின்றன. மற்றும் இப்பாண்டியன் மேற்கொண்ட
விருதுப் பெயர்கள் அத்தனையும் வடமொழிப் பெயர்களாகவே உள்ளன.
சீவரன், சீமனோகரன், சினச்சோழன், வீதகன்மஷன், விநயவிச்ருதன், விக்கிரம
பாரகன், வீர புரோகன், மானிய சாரனன், மநூபமன், மர்த்திகவீரன்,
கிரிஸ்திரன், கீதகின்னரன், கிருபாலயன், கண்டக நிஷ்டூரன், பாபபீரு,
குணக்ராகியன், கூடநிர்ணயன் என்பன அவற்றுள் சிலவாம். தமிழ்மொழியின்
காவலர்களாக இருந்துவந்த பாண்டிய மன்னரின் பரம்பரை வடமொழிக்கு
ஏற்றம் கொடுத்ததையும், அம்மொழிப் பெயர்களை மன்னன் விருப்பத்துடன்
ஏற்றுக் கொண்டதையும் அவனுடைய செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

     நெடுஞ்சடையன் பராக்கிரமனை யடுத்து அவன் மகன் இரண்டாம்
இராசசிம்மன் அரசுகட்டில் ஏறினான். இவன் கி.பி.

     1, S.I.I. VII. 431.