அரசாண்டிருந்தான். அவன், வரலாற்றில் முதல் வரகுணன் என்று குறிப்பிடப்படுகின்றான். முதல் வரகுணனுக்குப் பிறகு அவன் மகன் சீமாற சீவல்லபன் அரியணை ஏறினான் (கி. பி. 835). அவன் பல்லவர், சோழர், சேரர், கங்கர் உள்ளிட்ட பல மன்னர்களையும் வென்று புறங்கண்டான் என்று அவனைச் சின்னமனூர்ச் செப்பேடுகள் பாராட்டுகின்றன. சீவல்லபன் ஈழத்தின்மேல் படையெடுத்துச் சென்று ஆங்குப் பல நகரங்களை அழித்தான் என்றும், பொன்னாலான புத்தர் சிலைகளையும் பொன்னையும் மணியையும் கவர்ந்து கொண்டு சிங்களத்தை வறுமைக்குள் ஆழ்த்தினான் என்றும் இலங்கை வரலாறான மகாவமிசம் கூறுகின்றது. சீமாற சீவல்லபன் மூன்றாம் நந்திவர்ம பல்லவனுடன் கி.பி.854-ல் தெள்ளாற்றில் பொருது தோற்றான் என்று அறிகின்றோம். நந்திவர்மன் கண்ட வெற்றி, ‘தெள்ளாறெறிந்த’ என்ற அழியா விருது ஒன்றை அவனுக்கு வழங்கியது. இப் போரில் பாண்டியன் சீவல்லபன் தன் பெருமையையும் தொண்டை மண்டலத்தையும் ஒருங்கே இழந்தான் என அறிகின்றோம். சீவல்லபன் கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள அரிசிற்கரை என்னும் ஊரில் நிருபதுங்கவர்ம பல்லவனிடம் தோல்வியுற்றுச் சோழ நாட்டின் வடபகுதியை இழந்துவிட்டான். அவன் பல பெருந்தொல்லைகட்கு உட்பட்டு, பல போர்களை வென்றும், பலவற்றில் தோற்றும், நாட்டை ஒருவாறு கட்டிக் காத்துத் தன் மகன் இரண்டாம் வரகுணவர்மனுக்கு வைத்துவிட்டுத் தன் கண்களை மூடினான் (கி. பி. 862). வரகுணவர்மனுக்குச் சடையவர்மன் என்றும் ஒரு பெயருண்டு. அவன் அரசியல் சூழ்ச்சியும், காலங்கருதி வினையாற்றும் ஆற்றலும் வாய்ந்தவன். நிருபதுங்க பல்லவனுடன் நட்புறவு பூண்டு வடபுலங்களினின்றும் புகைந்து வரக்கூடிய பகைக்குத் தடையிட்டான். ஆனால், நிருபதுங்கன் மகன் அபராசிதன் தொண்டைமண்டலத்தையும், சோழ நாட்டையும் பல்லவப் பேரரசுக்கு மீட்டுக்கொள்ள முனைந்தான். ஆகவே, அவன் சோழநாட்டின் மேல் படையெடுத்தான். சோழ நாட்டை ஆண்டு வந்த விசயாலயனாலும், அவன் மகன் ஆதித்தனாலும் அவனை எதிர்த்து நின்று வெல்ல வியலவில்லை. போர் நடைபெற்ற இடமான இடவை என்ற நகரும் அதைச் சூழ்ந்திருந்த இடங்களும் பல்லவர் வசமாயின. வெற்றி முரசு கொட்டிய அபராசிதன் தொடர்ந்து பாண்டியன்மேல் பாய்ந்தான். ஆதித்த சோழனும் |