பக்கம் எண் :

380தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

பிருதிவிகங்கனும் அவனுக்குத் துணை நின்றனர். திருப்புறம்பயம் என்னும்
இடத்தில் நடந்த போரில் பிருதிவிகங்கன் உயிர் துறந்தான். பாண்டியன்
தோல்வியுற்றுப் பின்னடைந்தான். அவனுடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சோழ
நாட்டின் சில பகுதிகள், அவனுடைய பிடியினின்றும் நழுவி விட்டன.

     வரகுணனுக்கு ஆண் மகவு இல்லைபோலும். அவனுக்குப்பின் அவன்
தம்பி பராந்தக பாண்டியன் மணிமுடி சூட்டிக்கொண்டான். இவன்
சடையவர்மன் என்ற பட்டப் பெயரைப் பூண்டான். இவனுக்கு வீரநாராயணன்
என்று மற்றொரு பட்டப் பெயரும் உண்டு. இவன் மனைவி சேரநாட்டு
இளவரசி வானவன் மாதேவி என்பாள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
சேரமாதேவி என்னும் ஊர் இவ்வரசியின் பேரால் ஏற்பட்டதாகும். பராந்தக
பாண்டியன் பெண்ணாகடத்தை அழித்தான் என்றும், கொங்கர்களை
வென்றான் என்றும், கோயில்களுக்கும், அந்தணருக்கும், சமணப் பள்ளிகட்கும்
கொடைகள் வழங்கினான் என்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன.

     சடையவர்மன் பராந்தகன் மகன் மூன்றாம் இராசசிம்மன் தன் தந்தையின்
காலத்துக்குப் பிறகு பாண்டி நாட்டின் அரசு கட்டிலை அணிசெய்தான் (கி.பி.
900). அம் மன்னன்றான் சின்னமனூர்ச் செப்புப் பட்டயங்கள் வழங்கியவன்.
அவன் தன் பகைவர் பலர்மேல் வெற்றி கண்டவன் என்று அச் செப்பேடுகள்
கூறுகின்றன. ஆனால், அவன் கி.பி. 910-ல் முதலாம் பராந்தக சோழனிடம்
தோல்வியுற்றான் என்று சோழரின் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
மதுரை கொண்ட கோப்பரகேசரி என்று முதலாம் பராந்தகன் விருதுப் பெயர்
ஒன்றை ஏற்றான். மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்றுச் சிங்கள நாட்டில்
அடைக்கலம் புகுந்த செய்தியும், அடுத்து அங்கிருந்து அவன் தன் தாயின்
பிறந்த நாடாகிய சேரநாட்டுக்குச் சென்று படைத்துணை தேடியதும் சோழரைப்
பற்றிய வரலாற்றுப் பகுதியில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டன. சேர
நாட்டுக்குச் சென்ற இராசசிம்மனைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை.

     இராசசிம்மன் மகன் வீரபாண்டியன் (கி.பி.946-966) பாண்டி நாட்டுக்கு
ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவனாவான். பராந்தக சோழன் ஆட்சியில் சோழப்
பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாண்டி நாட்டுப் பகுதிகளை அவன் மீட்டுக்
கொண்டான். அவன் ‘சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்’ என்று
தன்னைப் பாராட்டிக் கொண்டுள்ளான்.2

     2. S.I.I. V.455.