பக்கம் எண் :

பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் 381

அவன் கொண்டது சோழ இளவரசர்களுள் ஒருவனது தலையே போலும்.
முதலாம் இராசராசனின் தமையனாகிய ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை
வென்று அவன் முடியைக் கொண்டிருக்க வேண்டும் என்று சோழர்களின்
கல்வெட்டுகளிலிருந்து விளங்குகின்றது (கி.பி. 966). வீரபாண்டியன் கி.பி.
966-ல் போரில் உயிர் துறந்தான். அவனுக்குப் பிறகு பல பாண்டியர்கள்
அரசாண்டு வந்துள்ளனர். அவர்களைப் பற்றிய தெளிவான செய்திகள் ஏதும்
கிடைக்கவில்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில்
அவர்கள் தம் ஆதிக்கத்தில் சிறுத்துப் புகழ் மங்கிச் சிற்றரசர்களாகக்
காலந்தள்ளி வந்தனர். அவர்கள் சோழர்களின் கோன்மைக்குக்
கீழ்ப்பட்டுத்திறை செலுத்தி வந்தனர்.

     முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1190-ல் முடிசூட்டிக்
கொண்டான். அவன் சோழன் மூன்றாம் குலோத்துங்கனுடன் முரண்பட்டான்;
சோழனிடம் தான் கொண்டிருந்த பகைமையை மேலும் மேலும் வளர்த்துக்
கொண்டான். சோழன் வெகுண்டு குலசேகரன்மேல் படையெடுத்தான்.
பாண்டியன் தோற்றோடிவிட்டான். சோழன் மதுரையில் நுழைந்து பல
அரண்மனைகளை இடித்துத் தள்ளி அங்குச் சோழ பாண்டியன் என்ற பட்டப்
பெயருடன் வீராபிடேகம் செய்து கொண்டான்.3 எனினும், குலோத்துங்கன்
சில ஆண்டுகளுக்குப் பின் பாண்டி நாட்டு அரசுரிமையை மீளவும்
குலசேகரனுக்கே வழங்கிவிட்டான்.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி. பி. 1219-51)

     குலசேகரனுக்குப் பின்பு முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
பட்டமேற்றான். இவன் குலசேகரனின் தம்பியாக இருக்கலாம் என்று சில
ஆய்வாளர் ஊகிக்கின்றனர். சோழநாட்டில் மூன்றாம் குலோத்துங்கன்
காலமான பிறகு, அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழ அரியணை
ஏறினான். மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழரின் மேல் படையெடுத்து
(கி.பி.1219) மூன்றாம் இராசராசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக்
கொண்டான். பிறகு சுந்தரபாண்டியன் பழையாறையில் வீராபிடேகம்
செய்துகொண்டு, தில்லைச் சிற்றம்பலவனைத் தொழுது தன்னாடு திரும்பினான்.
திரும்பும் வழியில் பொன்னமராவதியில் தங்கியிருந்த போது இராசராச
சோழனைக் கண்டு அவனுக்கே சோழநாட்டு அரியணையை மீண்டும் வழங்கி
அவனிடம்
 
    3. Ep. Rep. 554/1904.