திறைகொண்டான். ‘சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்’ என்று ஒரு விருதையும் அவன் இணைத்துக் கொண்டான்.4 மூன்றாம் இராசராசன் பாண்டியனுடன் மீண்டும் பகை பூண்டு திறை செலுத்திவந்ததை நிறுத்திவிட்டான். சுந்தர பாண்டியன் இராசராசன்மேல் படையெடுத்து (கி.பி.1231) அவனை நாட்டை விட்டே விரட்டினான். இராசராசன் கோப்பெருஞ்சிங்கனால் பிடிபட்டுச் சேந்தமங்கலத்துக் கோட்டையில் சிறைப்பட்டான். சுந்தரபாண்டியனை யடுத்து இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1239-51) பாண்டிய நாட்டை யரசாண்டான். அவன் மூன்றாம் இராசராசேந்திரனிடம் தோல்வியுண்டான். போசள மன்னன் வீரசோமேசுரன் இராசேந்திரனுடன் போரிட்டு அவனை வென்று பாண்டி நாட்டு ஆட்சியைச் சுந்தரபாண்டியனிடம் ஒப்படைத்தான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி கி.பி. 1251-ல் முடிவுற்றது. அவனுக்குப் பின் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறினான். சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251-1268) பாண்டிய மன்னருள் பேரிலும் புகழிலும் முன்னணியில் நின்றவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆவான். அவன் மாபெரும் வீரன்; மங்கிக் கிடந்த பாண்டி நாட்டு ஒளியைத் தூண்டிவிட்டுப் பேரொளியாக வளர்த்தவன். அவனுடைய ஆட்சியில் பாண்டிநாட்டு ஆதிக்கம் சோழ நாட்டைக் கடந்து, கேரளம், ஆந்திரம், கொங்கு நாடு ஆகிய நாடுகளிலும் பரந்து நின்றது. சடையவர்மன் முதன்முதல் சேர மன்னன் உதயமார்த் தாண்டனை வென்று தன் வெற்றி வாழ்க்கையைத் தொடங்கினான்; மலை நாட்டை அழித்தான். கண்ணனூரில் தங்கி ஆட்சி புரிந்துவந்த போசளர் இவனுக்கு அடிபணிந்தனர்; காவிரி நாட்டைக் கைவிட்டு ஓடினர்; போசள மன்னன் சோமேசுரன் வீரமரணம் எய்தினான் (கி.பி.1262). பாண்டியன் சோழ நாட்டைக் குன்ற வைத்துக் கோப்பெருஞ்சிங்கனுடைய சேந்தமங்கலத்தை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் அவனுக்குப் பணிந்துவந்து திறை செலுத்த உடன்பட்டும், சடையவர்மன் அவனைப் போரில் 4. Ep. Rep. 322/27-28. |